நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது..
நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி 31-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை கையகப்படுத்தியதாக ஹேமந்த சோரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரன், ஐஏஎஸ் அதிகாரியும் ராஞ்சி முன்னாள் துணை ஆணையருமான சாவி ரஞ்சன், பானு பிரதாப் பிரசாத் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.. கைது செய்யப்படுவதற்கு முன்பாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதை தொடர்ந்து சம்பாய் சோரன் ஜார்கண்ட் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
undefined
தனக்கு எதிரான நில அபகரிப்பு குற்றச்சாட்டுகளை மறுத்த ஹேமந்த் சோரன், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தால் பணமோசடி வழக்கு தம்மீது சுமத்தப்பட்டது என்று கூறினார்.
மேலும் ஜாமீன் கோரி ஹேமந்த சோரன் தாக்கல் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் இடைக்கால ஜாமீன் கோரி அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால் உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் நிலமோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது ஜார்கட்ன் மாநில தலைநகரில் 8.86 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக அமலாக்க இயக்குனரகம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. சட்ட விரோதமான நில பேரத்தில் ஹேமந்த் சோரன் ஈடுபட்டதை சாட்சிகள் உறுதி செய்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு கூறினார்.
சிக்கிம் வெள்ளம்: 70 அடி பாலத்தை 3 நாளில் கட்டி முடித்த ராணுவப் பொறியாளர்கள்!
ஆனால் அரசியல் பழிவாங்கும் நோக்கில் புனையப்பட்ட வழக்கு என்று ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாக்ஷி அரோரா வாதித்திட்டார். அனைத்து வாதங்களை கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முதன்மைக் கண்ணோட்டத்தில் அவர் குற்றவாளி அல்ல என்றும், ஜாமீனில் இருக்கும்போது மனுதாரர் குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹேமந்த் சோரன் தற்போது ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் (ஜேஎம்எம்) செயல் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.. எனினும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.