ஜி20 உச்சிமாநாடு உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து உயர்வதற்கும் உதவியுள்ளது. சில வல்லுநர்கள் இந்தியாவால் மட்டுமே ஜி20 நாடுகளிடையே ஒருமித்த கருத்தைக் கொண்டுவந்திருக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
தலைநகர் டெல்லியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட G20 உச்சிமாநாடு நடந்து முடிந்துள்ளது. உலகெங்கிலும் இருந்து தலைவர்கள் இந்தியாவின் தலைமையின் கீழ் வெற்றிகரமாக நடந்த இந்த மாநாட்டுக்குப் பாராட்டு கூறியுள்ளனர். குறிப்பாக இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. இது ஆழமான எதிர்கால ஒத்துழைப்புக்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளது.
இந்தியாவின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக, G20 நாடுகளுடன் ஆப்பிரிக்க யூனியனும் நிரந்தர உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பது உலகளாவிய அமைப்புகளில் மேலும் சீர்திருத்தங்கள் வருவதற்கு வித்திட்டுள்ளது.
உலகளாவிய அமைப்புகளை சீர்திருத்துவதற்கு குரல் கொடுக்கும் இந்தியா, ஜி20 கூட்டமைப்பில் ஒரு முன்மாதிரியாக செயல்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாடு உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து உயர்வதற்கும் உதவியுள்ளது. சில வல்லுநர்கள் இந்தியாவால் மட்டுமே ஜி20 நாடுகளிடையே ஒருமித்த கருத்தைக் கொண்டுவந்திருக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
மேற்குலக நாடுகளுடனும் ரஷ்யாவுடனும் சுமூகமான உறவுகளைக் கொண்டிருக்கும் இந்தியா, உலக நன்மைக்கான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இந்த டெல்லி ஜி20 உச்சிமாநாட்டில் முக்கியமான ஐந்து அம்சங்களைப் பார்க்கலாம்.\
கலாச்சார பாதை முதல் டிஜிட்டல் இந்தியா வரை: ஜி20 உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களைக் கவர்ந்த அம்சங்கள்
1) ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு: இந்தியாவின் தலைமையில் எடுத்த முயற்சியால் புதிய நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியன் G20 நாடுகளுடன் இணைந்துள்ளது. இதனால் ஜி20 இப்போது ஜி21 ஆக மாறியுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவரான அஸாலி அஸ்ஸௌமானியை, நிரந்தர உறுப்பினராக அமர்த்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். "அனைவரின் ஒப்புதலுடன், ஆப்பிரிக்க யூனியன் தலைவரை நிரந்தர ஜி20 உறுப்பினராக அமர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அஸ்ஸௌமானியை அழைத்து வந்தார். பிரதமர் மோடி உலகத் தலைவர்கள் மத்தியில் அவரை அமர வைத்தார்.
2) இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்: சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்தின் 10வது ஆண்டு நிறைவை ஒட்டி, இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை (IMEE-EC) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த வழித்தடமானது பொருளாதார ஒருங்கிணைப்பை வளர்ப்பதையும், ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் உள்ள ரயில்வே மற்றும் துறைமுக வசதிகளை இந்த வழித்தடம் இணைக்கும் எனவும் இந்தத் திட்டம் இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை 40 சதவீதம் வரை விரைவுபடுத்தும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.
3) டெல்லி பிரகடனம்: உக்ரைன் ரஷ்யா இடையேயான தாக்குதல்கள் மற்றும் அதற்கான அமைதியான தீர்வு ஆகியவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போருக்கான காலம் அல்ல, மாறாக உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் ஒரு பெரிய சாதனையாக, டெல்லி பிரகடனம் என்று அழைக்கப்படும் மாநாட்டு கூட்டறிக்கையில் உக்ரைன் போருக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது குறித்த தீர்மானத்திற்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. ஜோ பிடன், ரிஷி சுனக், ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் ஃபுமியோ கிஷிடா போன்ற ஜி20 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய இருதரப்பு சந்திப்புகள் இந்த ஒருமித்த கருத்துக்கு வழிவகுத்தன.
கடுமையான வார்த்தைகள் எதுவும் குறிப்பிடப்படாது என்ற வாக்குறுதி அளித்ததன் பேரில் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
4) காலநிலை மாற்றம் குறித்த ஒருமித்த கருத்து: ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த தீர்மானத்தைப் போலவே காலநிலை மாற்றம் தொடர்பான விவாதமும் சவால்களை முன்வைத்தது. இருப்பினும் காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. இது இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் குறிப்பிடத்தக்க முடிவாகப் பார்க்கப்படுகிறது. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பது மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பது ஆகிய சிக்கல்கள் விவாதிக்கப்பபட்டுள்ளன.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஜி20 உச்சி மாநாட்டு முடிந்த பின் உடனே நாடு திரும்பாமல் இந்தியாவில் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
5) உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி: உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஜி20 மாநாட்டில் மற்றொரு முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது. G20 உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்பினர் அல்லாத நாடுகள் உட்பட, பல நாடுகளும் பன்னிரண்டு சர்வதேச நிறுவனங்களும் இந்தக் கூட்டணியில் சேர ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டணியின் நிறுவன உறுப்பினர்கள். ஜோ பிடன், லூயிஸ் இனாசியோ டா சில்வா, ஆல்பர்டோ ஏஞ்சல் பெர்னாண்டஸ், ஜியோர்ஜியா மெலோனி, ஷேக் ஹசீனா மற்றும் பலர் முன்னிலையில் இந்தக் கூட்டணி தொடங்கப்பட்டது.
ஜி20 மாநாட்டில் சென்னைக்கு இவ்வளவு முக்கியத்துவமா! கடல்வழி பொருளாதாரத்தில் புதிய திருப்புமுனை!