புவிசார் அரசியல் பிரச்சினைகள் ஜி20 விவாதங்களை பாதிக்கக் கூடாது என லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்
டெல்லியில் நடைபெற்ற இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, ஜி20 தலைமை பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி20 தலைவர் பதவியை பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிடம் பிரதமர் மோடி முறைப்படி ஒப்படைத்தார்.
ஜி20 தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, புவிசார் அரசியல் பிரச்சினைகள் ஜி20 விவாதங்களை பாதிக்கக் கூடாது என்றார். ஜி20 நிறைவு விழாவில் பேசிய அவர், பிளவுபட்ட ஜி20இல் ஆர்வம் காட்டவில்லை எனவும், கூட்டு நடவடிக்கை மூலம் மட்டுமே இன்றைய சவால்களை எதிர்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 தலைவர் பதவியை அதிபர் லுலா டா சில்வாவிடம் ஒப்படைத்தவுடன், “எங்களுக்கு மோதலுக்கு பதிலாக அமைதி மற்றும் ஒத்துழைப்பு தேவை.” என்று அறைகூவல் விடுத்தார்.
ஜி20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ளது. “டெல்லியில் இருந்து ரியோ டி ஜெனிரோவிற்கு எங்களை அழைத்துச் செல்லும் பாதையில் அனைவரின் அர்ப்பணிப்பும், ஒத்துழைப்பும் தேவைப்படும்.” என்று லுலா டா சில்வா தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாட்டின் ஐந்து பிராந்தியங்களில் உள்ள ஒவ்வொரு நகரங்களிலும் ஜி20 கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
ஜி20 கூட்டமைப்பு உக்ரைனில் நடந்த போரினால் பிளவு பட்டது. மோதல் பற்றிய குறிப்புகளை நீர்த்துப்போகச் செய்த பின்னரே டெல்லி பிரகடனத்தில் ஒருமித்த கருத்தை எட்ட முடியும். ஜி20 டெல்லி பிரகடனம் ரஷ்யாவை விமர்சிக்கவில்லை. மாறாக, பிராந்திய ஆதாயத்திற்காக பலத்தை பயன்படுத்துவதற்கு மட்டுமே கண்டனம் தெரிவித்தது.
ஜி20 தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு: அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார் பிரதமர் மோடி!
ஜி20 பிரேசில் தலைமைக்கான தனது முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டிய லூலா டா சில்வா, அரசியல் மற்றும் நிதித் தடங்களை ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வைப்பதே தனது முயற்சியாக இருக்கும் என்றார். “சிறந்த பொதுக் கொள்கையை செயல்படுத்துவதற்கு எந்த ஆதாரங்களும் ஒதுக்கப்படவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.” என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களில் குரல் கொடுக்க இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். சமூக உள்ளடக்கம், பசிக்கு எதிரான போராட்டம், ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவை ஜி20க்கான முன்னுரிமைகளாக லுலா டா சில்வா பட்டியலிட்டார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் பலத்தை மீண்டும் பெறுவதற்கு நிரந்தர, நிரந்தரமற்ற உறுப்பினர்களாக புதிய வளரும் நாடுகள் தேவை என்று வலியுறுத்திய அவர், "உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் ஆகியவற்றில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை நாங்கள் விரும்புகிறோம் என்றார்.