உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மத்திய அரசு:
இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27%, தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்சி) 15%, பழங்குடியினருக்கு (எஸ்.டி) 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது அரசியலமைப்பு திருத்தத்தை மத்திய அரசு 2019ல் நிறைவேற்றியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டன. 2020-ம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
உச்சநீதிமன்றம்:
தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திரபட், தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையின்போது, இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று கடந்த 1992-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனுதாரர்கள் சுட்டிக் காட்டினர். ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சம் என்ற வரையறையும் விசாரணையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க..கரன்சி பாலிடிக்ஸ் கலாச்சாரம் பற்றி திமுக பேசலாமா.? திமுகவை பொளந்து கட்டிய பாஜக !
இடஒதுக்கீடு விவகாரம்:
இதுகுறித்து மனுதாரர்கள் தரப்பு கூறும்போது, நாட்டில் பெரும்பாலான குடும்பங்களின் மாத வருமானம் ரூ.20,000-க்கும் குறைவாக உள்ளது. அப்படியிருக்கும்போது, மாதம் ரூ.66,000 ஊதியம் பெறும் குடும்பத்தை எந்த வகையில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்று கூற முடியும் என கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்கும்போது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டின் வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது.
ஐந்து நீதிபதிகள் தீர்ப்பு:
அந்த அடிப்படையில்தான், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பும் நிர்ணயிப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த செப்டம்பர் 27ல் நிறைவடைந்தன. ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்தி வாலா ஆகியோர், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
பொதுப்பிரிவு:
ஆனால் இதற்கு தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அவர்கள், அரசியலமைப்பின் 103-வது திருத்தம் செல்லாது என்று தெரிவித்தனர். எனினும், இறுதியில் தலைமை நீதிபதி யு.யு. லலித், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
பாஜக & காங்கிரஸ் ஆதரவு:
பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டு வந்தது. இதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தற்போது, உச்ச நீதிமன்றமும் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித் திருக்கிறது. அரசியலமைப்பு சாசனத்துக்கு உட்பட்டே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று இதுகுறித்து கருத்து தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதேபோல காங்கிரஸ் கட்சியும் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின்:
இந்த தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்று கூறியிருந்தார். மேலும் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார் முதல்வர் மு.க ஸ்டாலின். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அதற்கு முன் அனைத்து கட்சிகளிடம் இருந்தும் முதல்வர் கருத்து கேட்கவுள்ளதாவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க.பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?
முன்னேறிய வகுப்பினர்:
முன்னேறிய வகுப்பினருக்கு மட்டுமே இந்த 10% இட ஒதுக்கீடு பொருந்தும். அதாவது மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த 10% இட ஒதுக்கீடு கிடைக்காது. முன்னேறிய வகுப்பில் இருக்கும் ஏழைகளுக்கு மட்டுமே இந்த 10% இட ஒதுக்கீடு கிடைக்கும். இதற்கு அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இந்த ரூ. 8 லட்சம் என்ற வரைமுறைக்கும், 10% என்ற இட ஒதுக்கீடு அளவையும் வரையறுப்பதற்குக் குறிப்பிட்ட அடிப்படை எதுவும் அமைச்சரவையிடம் இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல 2005 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சின்ஹோ கமிஷனின் பரிந்துரைகளை அரசு இந்த மசோதாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதேநேரம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்புக்கு அந்த ஆணையம் கொடுத்த வரையறை நிராகரிக்கப்பட்டு உள்ளது. அதற்கான தெளிவான காரணங்கள் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
தெளிவான விளக்கமில்லை:
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் யார் என்பதே பெரும் விவாதத்திற்கு உட்பட்டது என்பதால், ஓபிசி பிரிவினருக்கு கிரிமே லேயருக்கு நிர்ணயிக்கப்பட்ட வருமான வரம்பின் அடிப்படையில் இந்த 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு உள்ள கிரீமி லேயருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று 1993இல் நிபுணர் குழு அளித்த அளவுகோல் அடிப்படையிலேயே இந்த ரூ.8 லட்சம் வருமான வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இட ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெற்றவர்களாகக் கருதலாம்.ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட விவசாய நிலத்தை வைத்திருக்கக் கூடாது. 1000 சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது. இதுபோன்ற சில விதிமுறைகள் உள்ளன.
இடஒதுக்கீடு தேவையா?:
பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், அதற்கான விதிமுறைகள் முறையாக உள்ளதா என்று விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக 5 ஏக்கர் நிலமும் ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் வருமானமும் நிலம், வீட்டு மனை கொண்டவர்களுக்கு ஒதுக்கீடு தேவையா ?
2011-12 எடுக்கப்பட்ட சர்வே-இல் தேசிய சராசரி தனிநபர் செலவினத்துடன் ஒப்பிடும்போது, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரைக் காட்டிலும் அதிகப்படியான பொதுப் பிரிவினரின் தனிநபர் செலவினமே குறைவாக உள்ளது. இதை மேற்கொள் காட்டியே 10% இட ஒதுக்கீடு முன்னேறிய பிரிவினருக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பாலானோருக்கு கிரீமி லேயர் அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. அதே நேரத்தில் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ள உயர்த்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வருடம் 8 லட்சம் ரூபாய் வருமான வரக்கூடியவர்களுக்கு இத்தகைய இடஒதுக்கீடு அவசியமா ? என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க..பள்ளி மாணவியுடன் காதல்.! மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியர் - ஆச்சர்ய சம்பவம்!