கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கர்நாடக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 104 இடங்களில் பாஜகவும், காங்கிரஸ் 80 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் இரண்டு முறை எடியூரப்பாவும், ஒருமுறை குமாரசாமியும், ஒரு முறை பசவராஜ் பொம்மையும் முதலமைச்சர்களாக ஆட்சி செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஆக வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் அவர்களும் ஒருபக்கம் முட்டி மோதி வருகிறார்கள்.கருத்துக்கணிப்பின்படி, பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் அக்கட்சிக்கு சாதகமாக இல்லாமல் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சிக்கு வர அதிக வாய்ப்பு என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் (Karnataka Assembly Election 2023 ) நடத்தும் தேதி குறித்து, தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “கர்நாடகாவில் 9 லட்சத்திற்கும் அதிகமான முதல்முறை வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்கினை செலுத்த உள்ளனர். ஏப்ரல் 1, 2023 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைத்து வாக்காளர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள். கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13, 2023 அன்று நடைபெறும் என்றும் ஆணையர் தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டில் இருந்தபடியே வாக்கு செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். கர்நாடகாவில் 2.62 கோடி ஆண் வாக்காளர்கள், 2.59 கோடி பெண் வாக்காளர்கள் என 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 36 தனித்தொகுதிகளும் 15 பழங்குடியினர் தொகுதிகளும் உள்ளது.
ஒரு வாக்கு சாவடியில் 883 பேர் வாக்களிக்கும் வகையில் 58,282 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24ஆம் தேதி கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ
இதையும் படிங்க..புது ரூட்டில் திரும்பிய ஓபிஎஸ்.. நிம்மதியா விடமாட்டாங்க போலயே - புலம்பும் எடப்பாடி பழனிசாமி