"திராவிட நாடு" கோரிக்கையை முன்னெடுக்கும் கேரளா: மாட்டிறைச்சி தடையால் வலுவடையும் பிரச்சாரம்! 

First Published May 30, 2017, 6:04 PM IST
Highlights
Dravidanadu on Twitter Can a pressure group of southern states take on New Delhi


திராவிட நாடு, மொழி போராட்டம், மாநில சுயாட்சி, சமூக நீதி என அனைத்து கொள்கைகளுக்கும் தாயகமாக விளங்கியது தமிழகம்தான்.

ஆனால், அவற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு சாதித்து காட்டியவை எல்லாம், மற்ற மாநிலங்களாக இருக்கும்.

அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரால், முன்னெடுக்கப்பட்ட திராவிட நாடு என்ற கோரிக்கையை, கேரளா தற்போது தூக்கி பிடித்துள்ளது.

22. #Kerala is the Secular, Socialist land India could never become. Mess with this ethos and we will Revolt for a #DravidaNadu. Lal Salaam!

— ☭ Comrade Nambiar ☭ (@Kerala_Soviet) May 19, 2017

மத்திய அரசு, கடந்த 26 ம் தேதி, மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததை அடுத்து, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் , மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் பெரிய அளவில் தலை தூக்க ஆரம்பித்து விட்டன. கேரளாவில் மட்டும் ஒரே நாளில், 210 இடங்களில் மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது. 

இந்தியா முழுவதும் மாட்டிறைச்சி என்பது அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் முக்கிய உணவாக இருந்தாலும், மேற்கு வங்கம், கேரளா,கர்நாடகா,புதுச்சேரி முதலமைச்சர்கள் தடை சட்டத்தை ஏற்க முடியாது என்று அறிவித்திருக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் தரப்பு, மாட்டிறைச்சி தடை குறித்து இதுவரை, தமது ஆதரவையோ, எதிர்ப்பையோ பதிவு செய்யவில்லை.

மாட்டிறைச்சி தடைக்கு எதிரான, தென் மாநில போராட்டங்களின் தொடர்ச்சியாக, சமூக வலைதளமான டிவிட்டரில் கேரளா சார்பில்  "திராவிடநாடு" என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில்,  'தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களை ஒன்றிணைத்து, தனி நாடு உருவாக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.

திராவிட நாடு என்ற கோரிக்கையை 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் முன்னெடுத்திருந்தாலும், 1962 ம் ஆண்டு சீன போரின்போது, பிரிவினை வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு, அந்த கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பின்னர், திராவிட நாடு என்ற கோரிக்கை மாநில சுயாட்சியாக மறு வடிவம் பெற்றது. தற்போது, தமிழ் தேசியம் என்ற கொள்கையையும் சில கட்சிகள் தூக்கி பிடித்து வரும் நிலையில், மாட்டிறைச்சி விவகாரம், திராவிட நாடு என்ற கோரிக்கை வலுப்பெற காரணமாகி உள்ளது.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆய்வு நூலை 1856 ல் வெளியிட்ட ஆங்கில அறிஞர்  ராபர்ட் காலிடுவேல், பின்னாளில் திராவிட மொழி இயலின் தந்தை என்று போற்றப்பட்டார். உலகின் மூத்த மொழியாக தமிழையே, ராபர்ட் கால்டு வெல் குறிப்பிடுகிறார்.

எனவே, திராவிடம் என்ற கொள்கை வலுவடைய முதல் காரணமாக இருந்தவர் ராபர்ட் கால்டுவெல்லே ஆவார்.

அதன் பின்னர், 1871 ல், ஆங்கில அரசு சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தும்போது. தீண்ட தகாதவர்களாக சித்தரிக்கப்படுபவர்கள், தங்களை சாதி இல்லாத திராவிடர்களாக, பதிவு செய்து கொள்ளுமாறு, அயோத்தியதாச பண்டிதர் கூறுகிறார்.

அதை தொடர்ந்து, பெரியார், அண்ணா உள்ளிட்டவர்கள் திராவிட நாடு என்ற கொள்கையை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

இவ்வாறு, தமிழகம் 50 வருடங்களுக்கு முன்பே அறிவுறுத்திய திராவிட நாடு என்ற கோரிக்கையை, தற்போது கேரளா கையில் எடுத்துள்ளது.

இந்த கோரிக்கை வெற்றி பெறுமா? அல்லது, மத்திய அரசு, தமது அறிவிப்பில் இருந்து பின் வாங்குமா? என்பதை  அடுத்தடுத்த நடவடிக்கைகளே தீர்மானிக்கும். 

 

 

click me!