நாட்டின் பதினாறாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில், இதற்கு முந்தைய தேர்தல்களில் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளைத் திரும்பிப் பார்ப்போம்.
நாட்டின் பதினாறாவது குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகிறார்கள். இத்தேர்தலில் நாடாளுமன்ற எம்.பி.க்களும் மாநிலத்தில் உள்ள எம்.எல்.ஏக்களும் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் உள்ள சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு மதிப்பில் 50 சதவீத வாக்குகளை தாண்டும் வேட்பாளர் வெற்றி பெறுவார். இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21 அன்று எண்ணப்பட உள்ளன. வெற்றி பெறும் வேட்பாளர் ஜூலை 25 அன்று நாட்டின் பதினைந்தாவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பார்.
இதையும் படிங்க: இன்று நடைபெறுகிறது குடியரசு தலைவர் தேர்தல்… வெற்றிப்பெறப்போவது யார்?
இந்தத் தேர்தலுக்கு முன்பாக 15 தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. அவற்றில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் சில:
1. 1950 ஜனவரி 26-ல் இந்தியா குடியரசு நாடாக மலர்ந்ததையடுத்து, அதே தினத்தில் இடைக்கால குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றார். இதனையடுத்து 1952இல் முதன் முறையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து 3 சுயேட்சைகள் களமிறங்கினர். இந்தத் தேர்தலிலும் 1957இல் நடந்த தேர்தலிலும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தொடர்ச்சியாக இரண்டு முறை வென்று குடியரசுத் தலைவரானார். இந்தியாவில் இரண்டு முறை பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவர் இவர் மட்டுமே.
இதையும் படிங்க: ஜெகதீப் தங்கருக்கு டஃப் கொடுப்பாரா எதிர்க்கட்சி வேட்பாளர்.. யார் இந்த மார்கரெட் ஆல்வா? முழு தகவல்கள் இதோ..!
2. இபோதெல்லாம் குடியரசுத் தலைவர் தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், தொடக்கக் காலத்தில் அப்படியல்ல. 1952 முதல் குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே 4 பேர் போட்டியிட்டார்கள். 1967 தேர்தலில் மிக அதிகபட்சமாக 17 பேர் போட்டியிட்டார்கள். இதில் 15 பேர் சுயேட்சைகள். இதேபோல் 1969இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிலும் 15 பேர் போட்டியிட்டார்கள். அன்று சுயேட்சைகள் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. எனவே, பலரும் தேர்தலில் குதித்தார்கள். குறிப்பாக சவுத்ரி ஹரிராம் என்பவர் 1952 முதல் 1967 வரை நான்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் தொடர்ச்சியாக சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
3. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், 1967இல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற பிறகு 1969ஆம் ஆண்டிலேயே தேர்தல் மீண்டும் வந்தது. அப்போது ஜாகீர் உசேன் மறைவால் ஒன்றரை ஆண்டுகளிலேயே தேர்தல் வந்தது. இதேபோல் 1974இல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்த பிறகு 1977-ஆம் ஆண்டிலேயே மீண்டும் தேர்தல் வந்தது. அப்போது பக்ருதீன் அலி அகமது மறைவால் 3 ஆண்டுகளில் தேர்தல் வந்தது. குடியரசுத் தலைவர் பதவி வகித்தபோது மறைந்தவர்கள் இவர்கள் மட்டுமே.
4. குடியரசுத் தலைவர் தேர்தலில் சுயேட்சைகள் போட்டியிடுவதைத் தடுக்கவும், போட்டியிட்ட சுயேட்சைகள் வழக்குத் தொடர்வதைத் தடுக்கவும் புதிய விதிமுறைகள் 1974 தேர்தலில் புகுத்தப்பட்டன. அதன்படி போடியிடும் வேட்பாளரை 10 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும் என்றும் 10 பேர் வழிமொழிய வேண்டும் என்றும் விதிமுறை மாற்றப்பட்டது. மேலும் வைப்புத் தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாதபடி உச்ச நீதிமன்றம் மட்டுமே வழக்கை விசாரிக்கும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதையும் படிங்க: சட்டென சரியும் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு... ஏன் தெரியுமா?
5. 1969 தேர்தலில் காங்கிரஸ் தலைமை நீலம் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக அறிவித்தது. ஆனால், கட்சி அறிவித்த வேட்பாளரை எதிர்த்தே பிரதமர் இந்திரா காந்தி வி.வி. கிரியை சுயேட்சையாக களமிறங்க வைத்தார். வரலாற்றில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற தேர்தல் என்றால், அது 1969 தேர்தல்தான்.