வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வைத்திருப்பதாக கர்நாடாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
2020ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் மீதான தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சிவக்குமார், ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த வழக்கை நீதிபதி நடராஜன் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. சிவக்குமாரின் சொத்துக்களில் ரூ.74 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், அவரது 21 வயது மகளின் ரூ.150 கோடி சொத்துக்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் சிபிஐ வாதிட்டது.
2013 மற்றும் 2018 க்கு இடையில் காங்கிரஸ் தலைவரின் சொத்து மதிப்பு 589 கோடி ரூபாய் அதிகரித்ததை அடுத்து இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை பெற்ற சிவக்குமார், அந்த உத்தரவுக்கு அவ்வப்போது நீட்டிப்பு பெற்றுவந்தார்.
Karnataka Elections 2023: ஒரே தொகுதியில் தம்பியையும் களம் இறங்கும் டி.கே. சிவகுமார்! ஏன் தெரியுமா?
வழக்கு விசாரணையின் போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிவகுமார் வழக்கை எந்த புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று வாதிட முடியாது என்று கூறி, அவரது உறவினர் ஒருவரின் வழக்கை உதாரணமாகக் காட்டினார். சிவகுமாரின் வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட உறவினர் எச்ஏஎல் (HAL) ஊழியர் என்றும், அதனால் அதுவும் இதுவும் ஒன்று அல்ல என்றும் வாதிட்டார்.
சிபிஐ விசாரணையைத் தொடங்க போதுமான காரணம் உள்ளதா என்பது குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களும் கேள்வி எழுப்பினர்.
டி.கே. சிவகுமார் கனகபுரா தொகுதியில் கடந்த திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று அவரது தம்பியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே. சுரேஷும் அதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பாதகமான தீர்ப்பு வெளியானால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகவும் வேட்புமனு நிராகரிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே, அவர் போட்டியிடும் தொகுதியில் தனது சகோதரர் டி.கே. சுரேஷையும் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தேஜஸ்வி சூர்யாவை ஓரம் கட்டுகிறதா பாஜக? ஸ்டார் லிஸ்டில் இடம்பெறாதது ஏன்?