முதலில் ரூ.186 கோடி மதிப்பிலான நகைகள்… இப்போது வைரங்கள் - பத்மநாபசாமி கோயிலில் அடுத்தடுத்து மாயமாகும் அதிர்ச்சி!

First Published Jul 4, 2017, 9:21 AM IST
Highlights
diamonds missing in padamanabasamy temple


கேரளாவின் , திருவனந்தபுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற பத்மநாபசாமி கோயிலில் பழங்கால ‘8 வைரங்கள்’ மாயமாகி உள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் கோயிலின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட கோபால் சுப்பரமணியம் தெரிவித்துள்ளார்.

ரகசிய பாதாள அறை

திருவனந்தபுரத்தில், புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவிலில் ரகசிய பாதாள அறைகளில் பொக்கிஷங்கள் இருப்பதாக பேச்சு எழுந்தது. இது தொடர்பாக  உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள், கோயிலில் உள்ள பாதாள அறைகளை திறக்க ஆணையிட்டனர்.

ரூ.1.50லட்சம் கோடி

அதன்பேரில்  கோவிலில் 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டன. அங்கு தங்கம், வெள்ளி நகைகள் என ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு போடப்பட்டது.

நியமனம்

மேலும், கோவிலை ஆய்வு செய்ய நீதிமன்றம் சார்பில் ஆலோசகராக மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் அவர் சமீபத்தில் அளித்த அறிக்கையில், கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதுபற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். அதன் அடிப்படையில், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயிடம் கோவில் சொத்துகளை தணிக்கை செய்யும் பொறுப்பை நீதிமன்றம் ஒப்படைத்தது.

ரூ.186 கோடி நகைகள் மாயம்

2004–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரையிலான கணக்குகளை வினோத் ராய்கமிட்டி தணிக்கை செய்தது. அவர்கள் அளித்த அறிக்கையில் கோயிலின் ரூ.186 கோடி மதிப்புள்ள தங்கம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை அளித்த 10 மாதங்களுக்குள் அடுத்த பகீர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

8 வைரங்கள்

அதாவது, ஸ்ரீ பத்மநாபசாமி கோவில் சாமி சிலையில் அன்றாடம் பூஜைக்கு வைக்கப்படும் நெற்றி நாமத்தில் இருந்து 8 வைரங்கள் மாயமாகி உள்ளது என சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் அறிக்கையை தாக்கல் செய்து உள்ளார். இந்த வைரங்களின் மதிப்பானது ரூ. 21 லட்சமாக என்றபோதிலும், சந்தை மதிப்பின்படிஅதைக் காட்டிலும் அதிகரிக்கும்

 கடந்த 2015 ஆகஸ்ட் மற்றும் மார்ச் 2016-ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்ட இந்த 8 வைரங்கள், 2017 மே மாதம் மாயமாகி உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

பாதுகாப்பு அதிகாரி

மேலும், கோவிலில் பாதுகாப்பு  விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், போலீஸ் டிஐஜி எச்.வெங்கடேஷை தலைமை பாதுகாப்பு அதிகாரியாகவும், கண்காணிப்பு அதிகாரியாகவும் நியமனம் செய்யவேண்டும் எனவும், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி பரிந்துரையின் பேரில் கோவிலுக்கு தணிக்கை அதிகாரி நியமிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!