
ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு அட்மிசன் கொடுக்காமல் மருத்துவமனைகள் மாறி மாறி அலைக்கழித்தது தொடர்பாக விசாரணை நடத்த மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது..
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், ஜோஹ்ரா கா பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் லச்சா தேவி.
நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அருகில் உள்ள அக்பர்பூர் சமுதாய சுகாதார மையத்திற்கு தன் கணவனுடன் சென்றுள்ளார்.
அங்குள்ள டாக்டர்கள், அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்காமல், ஆல்வார் மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரை செய்துள்ளனர்.
இதையடுத்து ஆல்வாரில் உள்ள சாட்டிலைட் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஜனானா மருத்துவமனைக்கு செல்லும்படி கூறி அனுப்பியுள்ளனர். அங்கு சென்றால், அவர்களும் அட்மிசன் கொடுக்கவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுடன் வீடு திரும்பியுள்ளார் லச்சாதேவி.
இந்நிலையில் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திற்குள் லச்சா தேவிக்கு வலி அதிகமானது. எனவே, மீண்டும் அருகில் உள்ள அக்பர்பூர் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், மருத்துவமனைக்கு வெளியிலேயே அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது.
இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைகளின் அலட்சியமான போக்கு குறித்து விசாரணை நடத்தும்படி சுகாதாரத்துறை அமைச்சரிடம் மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
அக்பர்பூர் மருத்துவமனை நர்சை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட சுகாதார அதிகாரி கூறியுள்ளார். மேலும், இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.