
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டதை அடுத்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறையின் கூடுதல் பொறுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது. பிரதானின் ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரகலாத் ஜோஷி, தனது தற்போதைய இலாகாக்களுடன் சேர்த்து கல்வித்துறையையும் கவனிப்பார்.
"பிரதமரின் ஆலோசனையின் பேரில், மத்திய அமைச்சரவையில் இருந்து தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை இந்தியக் குடியரசுத் தலைவர் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இது இந்திய அரசியலமைப்பின் 75(2) பிரிவின் கீழ் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரதமரின் ஆலோசனையின்படி, கேபினட் அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு, அவரது தற்போதைய இலாகாக்களுடன் கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பை குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளார்," என்று குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: 3 கோரிக்கைகளையும் ஏற்ற மத்திய அரசு! CJP போராட்டம் வாபஸ்! இயல்பு நிலைக்கு திரும்பும் தலைநகர்!
பிரகலாத் ஜோஷி, கர்நாடகாவின் தார்வாட் தொகுதியின் மக்களவை எம்.பி.யும், மத்திய அமைச்சரும் ஆவார். தற்போது அவர் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளின் அமைச்சராக இருக்கிறார். இதற்கு முந்தைய ஆட்சியில், நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
தர்மேந்திர பிரதான் ராஜினமா
'மாணவர்களின் நலன் கருதியும், தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்களை தேசவிரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்ளாமல் தடுப்பதற்காகவும்' பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாக தர்மேந்திர பிரதான் முன்னதாக தெரிவித்திருந்தார். தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோரி, நாடு தழுவிய அளவில் பல வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக இந்த ராஜினாமா வந்துள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் வாபஸ்
இதற்கிடையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதாலும், பிற கோரிக்கைகள் மீது அரசு உறுதியளித்ததாலும், 'நல்லெண்ண அடிப்படையில்' ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைநகரில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய CJP-யின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், "ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில், எங்கள் போராட்டத்தை நல்லெண்ணத்துடன் வாபஸ் பெறுகிறோம்," என்றார்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் திடீர் ராஜினாமா! இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்!
மத்திய அரசு சொன்னது என்ன?
மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, CJP இந்த அறிவிப்பை வெளியிட்டது. நீட் தேர்வு தொடர்பாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், இந்தியா முழுவதும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR-களை வாபஸ் பெறவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக CJP கூறியுள்ளது.
கல்வித் தேர்வு முறை சீர்திருத்தங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) எழுப்பிய கோரிக்கைகளை அரசு பரிசீலித்து ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவும் தெரிவித்தார். தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பான அந்த அமைப்பின் ஐந்து அம்ச கோரிக்கைகளை அரசு கவனமாக ஆய்வு செய்து, விவாதங்களுக்குப் பிறகு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நட்டா கூறினார்.