
தனிநபர் ஒருவர் கையில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம், நிறுவனங்கள் எவ்வளவு வைத்திருக்கலாம் என்பதற்கு கட்டுப்பாடு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.3 லட்சத்துக்கு மேல் பரிமாற்றம் செய்ய தடை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கையில் ரொக்கமாக அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க கட்டுப்பாடு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ரொக்கப்பரிமாற்றத்தை குறைத்து டிஜிட்டல் பரிமாற்றத்தை கொண்டு வர மத்தியஅரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனியார் வங்கிகள் 4 முறைக்கு மேல் ரொக்கப்பரிமாற்றத்துக்கு ரூ.150 கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளன.
அடுத்த நடவடிக்கையாக கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு கடந்த ஆண்டு சில பரிந்துரைகள் அளித்திருந்தது. அதில், தனிநபர்கள் அதிகபட்சமாக ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய தடையும், கையில் அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்துக்கொள்ள தடையும் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த பரிந்துரையில், ரூ. 3 லட்சத்துக்கு மேலம் ரொக்கமாக பரிமாற்றம் செய்ய தடை விதித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக தனிநபர் ஒருவர் கையில், அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடை விதிக்கும் பரிந்துரையை அமல்படுத்தமத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அடுத்த வாரம் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதிமசோதாவாக தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்படலாம் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.