மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு... முதலமைச்சரின் அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 25, 2021, 3:57 PM IST
Highlights

டெல்லியில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மக்களை திண்டாட வைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை 69 லட்சத்து 60 ஆயிரத்து 172 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி புதிய உச்சங்களை எட்டி வருகிறது. 

குறிப்பாக டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் ஏராளமானோர் ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர். டெல்லியில் நிலவும் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் வேகமாக செயல்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. 

இந்நிலையில் டெல்லியில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கடந்த 21ம் தேதி நாளை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 நாட்களுக்கு அதாவது மே 3ம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் ஒருவாரம் முழு ஊரடங்கை அமல்படுத்திய போதும் பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை குறையாததால் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லியில் அனுமதி உள்ளது. பிற தேவைகளுக்காக வெளியே செல்வோர் ஈ-பாஸ் பெற்றே பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

click me!