புடின் வீட்டில் தாக்குதலா? பதறிப்போன பிரதமர் மோடி.. பேச்சுவார்த்தை தான் முக்கியம் என அட்வைஸ்!

Published : Dec 30, 2025, 02:58 PM IST
Modi Putin Meeting

சுருக்கம்

ரஷ்ய அதிபர் புனின் இல்லம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் உக்ரைன் இதனை மறுத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் கவலை

ரஷ்ய அதிபரின் இல்லம் குறிவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் கவலையளிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2022-ஆம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்தே, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே அமைதியை எட்ட முடியும் என்பதை அவர் வலியுறுத்தி வருகிறார்.

"தற்போதைய ராஜதந்திர முயற்சிகளே அமைதிக்குச் செல்லும் சரியான வழி. அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் அனைத்துத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் குற்றச்சாட்டு

மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் இடையே உள்ள புடினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் 91 ட்ரோன்களை ஏவித் தாக்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான அனைத்து ட்ரோன்களும் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், உயிர் சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் என லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.

உக்ரைனின் மறுப்பு

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார். "இது கீவ் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா சொல்லும் ஒரு பொதுவான பொய்" என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தமது குழுவினர் மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்கவே ரஷ்யா இத்தகைய வதந்திகளைப் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

டிரம்ப் கடும் அதிருப்தி

இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் புனுடன் பேசிய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"இது ஒரு முக்கியமான காலகட்டம். அதிபரின் இல்லத்தைத் தாக்குவது சரியானதல்ல. இதைக் கேட்டு நான் மிகவும் கோபமடைந்தேன்," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பிற்குப் பிறகு, அமைதி ஒப்பந்தம் மிக அருகில் இருப்பதாகவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எஞ்சியிருக்கும் சவால்கள்

அமைதிப் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், சில முக்கியப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

போருக்குப் பிந்தைய காலத்தில் உக்ரைனுக்கு 15 ஆண்டுகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதாகத் தெரிகிறது.

உக்ரைனின் சில பகுதிகளைக் கைப்பற்றுவதில் ரஷ்யா பிடிவாதமாக உள்ளது. குறிப்பாக சப்போரிஜியா அணுமின் நிலையத்தின் எதிர்காலம் மற்றும் சில எல்லைப் பகுதிகள் குறித்த சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன.

இந்தச் சமீபத்திய மோதல்கள், ரஷ்யா-உக்ரைன் இடையே மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரு மதங்களின் போட்டியாக மாறும் மேற்கு வங்க அரசியல்..! இஸ்லாமிய நபரால் மம்தாவுக்கு திடீர் செக்..!
Ola, Uber-க்கு குட்பை.. ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் Bharat Taxi App சேவை.. முழு விபரம் இதோ