
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றம், "அவர் ஏற்கனவே 7 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்துள்ளார்" என்பதைக் காரணம் காட்டி அவரது தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவு நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த சர்ச்சைக்குரிய உத்தரவை எதிர்த்து சிபிஐ (CBI) தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, "செங்கார் போன்ற அதிகாரம் படைத்த நபர்களுக்கு ஜாமீன் வழங்குவது பாதிக்கப்பட்ட தரப்பினருக்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும்" எனக் கருதி ஜாமீன் உத்தரவுக்குத் தடை விதித்தது.
மேலும், செங்கார் ஒரு 'அரசு ஊழியர்' (Public Servant) அல்ல என்று உயர் நீதிமன்றம் கூறிய கருத்தையும் உச்ச நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள உன்னாவ் பாதிப்பாளர் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எனது போராட்டம் இன்றும் தொடர்கிறது. அவனுக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன். அப்போது தான் எனக்கும், சிறையிலேயே கொல்லப்பட்ட எனது தந்தைக்கும் முழுமையான நீதி கிடைக்கும். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எதைக் கருத்தில் கொண்டு அவனுக்கு இரக்கம் காட்டினார்கள் என்று தெரியவில்லை," எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரும் உச்ச நீதிமன்றத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் இந்தப் பெண்ணும் அவரது தாயாரும் போராட்டம் நடத்தியபோது, பாதுகாப்புப் படையினரால் அவர்கள் அச்சுறுத்தப்பட்ட வீடியோக்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடையால் குல்தீப் சிங் செங்கார் சிறையிலேயே நீடிப்பார். அவர் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க நான்கு வாரக் காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.