கடந்த மே 19 அன்று புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் இன்று செப்டம்பர் 30, 2023க்குள் பொதுமக்கள் தங்கள் நோட்டுகளை உரிய இடங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடைசி நேர இடையூறுகள் இல்லாமல் நோட்டுகளை டெபாசிட் செய்ய மக்களுக்கு அதிக நேரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஏற்கனவே வழங்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் தொடர்ச்சியாக இடையூறு இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்யவே இந்த முயற்சி என்று கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த மே 19 அன்று, மொத்த மதிப்பு 3.56 லட்சம் கோடி மதிப்புடைய 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. செப்டம்பர் 29 ஆம் தேதி நிலவரப்படி வங்கிகளுக்கு சுமார் 3.42 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகள் வந்துள்ளன என்று அறிக்கை வெளியாகியுள்ளது. அதாவதுசுமார் 0.14 லட்சம் கோடி மதிப்புள்ள (2000 ரூபாய்) நோட்டுகள் மட்டுமே இன்னும் புழக்கத்தில் உள்ளன.
மே 19ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்த 2000 நோட்டுகளில் 96 சதவீதம் திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. "திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்றோடு முடிந்துவிட்டதால், மதிப்பாய்வு அடிப்படையில், 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மற்றும் மாற்றுவதற்கான தற்போதைய ஏற்பாட்டை அக்டோபர் 07, 2023 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் RBI தெரிவித்துள்ளது.
"அக்டோபர் 08, 2023 முதல், 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான நடைமுறை பின்வருமாறு செயல்படுத்தப்படும். மக்கள் வங்கிக் கிளைகளில் டெபாசிட் அல்லது பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால் 2000 ரூபாய் நோட்டுகளை தனிநபர்கள் தொடர்ந்து மாற்றிக்கொள்ளலாம், அதாவது 19 ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் அவர்கள் அதை மாற்றிக்கொள்ளலாம். அதற்கும் ஒரே நேரத்தில் 20,000 வரை மட்டுமே வரம்பு.