பொதுமக்களுக்கு ஓர் ஆறுதல்..கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பவுடர் மருந்து..இந்தியாவில் ஒரு வாரத்தில் அறிமுகம்!

By Asianet TamilFirst Published May 15, 2021, 9:27 PM IST
Highlights

தண்ணீரில் கரைத்து குடிக்கும் 2டிஜி பவுடர் கொரோனா தடுப்பு மருந்தை ஒரு வாரத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஒ) தெரிவித்துள்ளது.
 

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மக்களைப் பாடாய்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமலும் ஆக்சிஜன் வசதி இல்லாமலும் பொதுமக்கள் மடிவது தொடர்கிறது. ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையாலும் மக்கள் அலைந்து திரிகிறார்கள். இந்நிலையில் டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) என்ற கரைசல் மருந்தைத் தயாரித்துள்ளது.


இந்த மருந்தின் மீதான மருத்துவ பரிசோதனை கொரோனா நோயாளிகள் மீது நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட பரிசோதனை இந்தியாவில் 6 மருத்துவமனைகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மூன்றாம் கட்ட பரிசோதனை 2020 டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனை 220 கொரோனா நோயாளிகள் மீது நடத்தப்பட்டது. மூன்றாம் கட்ட பரிசோதனையும் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, மருந்து பற்றி டிசிஜிஐ அமைப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு டிஆர்டிஓ கண்டுபிடித்த 2-டிஜி மருந்து கொரோனா நோயாளிகளுக்கு நல்ல பலனைக் கொடுக்கிறது என்பதும் ஆக்சிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கும் நல்ல பலன் கொடுக்கிறது என்பதும் நிரூபணம் ஆனது.
இந்நிலையில் இந்த மருந்து சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. முதல் கட்டமாக 10 ஆயிரம் டோஸ் பவுடர் மருந்துகளை தயாரித்து டிஆர்டிஓ வெளியிட உள்ளது. 2டிஜி கொரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியை தடுக்கும். இதன் மூலம் ஆக்சிஜன் உதவியோடு இருக்கும் கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள இந்த மருந்து உதவும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

click me!