Karnataka election: நேருக்கு நேர் களம் காணும் காங்கிரஸ், பாஜக பிரபலங்கள்; முக்கிய முகங்களை கழற்றிவிட்ட பாஜக!!

By Dhanalakshmi G  |  First Published Apr 12, 2023, 11:38 AM IST

கர்நாடகா மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று மாலை வெளியானது. இந்தப் பட்டியலில் புதியவர்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகா மாநில தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகிறது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து இருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாகவே வேட்பாளர்களை முடிவு செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வந்தது. நேற்று மாலை முதல் பட்டியலை வெளியிட்டது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் முதல் கட்டமாக 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. 

முதல் பட்டியலில் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எட்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 32 சீட் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 30 சீட் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், 16 சீட் பழங்குடியினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 52 பேர் புதியவர்கள் என்றாலும், இவர்கள் நீண்ட நாட்கள் கட்சிக்காக உழைத்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

Latest Videos

இந்தப் பட்டியலில் ஒன்பது டாக்டர்கள், ஐந்து வழக்கறிஞர்கள், மூன்று கல்வியாளர்கள், ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, ஒரு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, மூன்று முன்னாள் அரசு ஊழியர்கள், எட்டு சமூக ஆர்வலர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்த கேஎஸ் ஈஸ்வரப்பா, ஹலாடி ஸ்ரீநிவாஸ் ஷெட்டி மற்றும் நடப்பு எம்எல்ஏக்கள் 11 பேரின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மைக்கு ஷிகான் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். அவருக்கு பதில் அவரது மகன் பிஒய் விஜயேந்திராவுக்கு ஷிகாரிபுரா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

நோ சீட்.! பல்டி அடித்த பாஜக தலைவர்.. அண்ணாமலை போட்ட ட்வீட் - கர்நாடக தேர்தலில் அதிரிபுதிரி

காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர்களான டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையாவுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் வகையில் வலுவான அமைச்சர்களை பாஜக களமிறக்கியுள்ளது.

வருணா தொகுதியில் சித்தரமையாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மைசூர் பகுதியில் பிரபலமான லிங்காயத் தலைவர் சோமண்ணாவை பாஜக களம் இறக்கியுள்ளது. கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முதல்வர் வேட்பாளராக கருதப்படும் டிகே சிவகுமாருக்கு எதிராக பாஜகவில் இருந்து ஒக்கலிக்கா சமூகத்தைச் சேர்ந்த வலுவான அமைச்சர் ஆர். அசோக் களம் இறக்கப்பட்டுள்ளார். சிவகுமாரும் ஒக்கலிக்கா சமூகத்தைச் சேர்ந்தவர். இத்துடன் பெங்களூரு நகரில் இருக்கும் பத்மனாபநகர் தொகுதியிலும் அசோக் போட்டியிடுகிறார். அதேபோல் சோமண்ணாவும் சாம்ராஜ் நகரில் போட்டியிடுகிறார். கடந்த 2018ஆம் ஆண்டில் சோமண்ணா பெங்களூரு நகர்ப்புறத்தில் இருக்கும் கோவிந்தராஜநகர் தொகுதியில் இருந்து 11,375 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

கட்சி தலைமை தன்னை ஒதுக்குவதாகக் கூறி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சோமண்ணா சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சோமண்ணாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னபட்னா தொகுதியில் முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான ஹெச்டி குமாரசாமியை முன்னாள் அமைச்சர் சிபி யோகேஸ்வர் எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் பட்டியலில் இடம் பெறாத சிவமோகா, மத்திய ஹப்பள்ளி தார்வாட், கிருஷ்ணராஜா ஆகிய தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. சிவமோகாவில் கடந்த 2018ல் ஈஸ்வரப்பா வெற்றி பெற்று இருந்தார். மத்திய ஹப்பள்ளி தார்வாட் தொகுதியில் ஜகதீஸ் ஷெட்டார் வெற்றி பெற்று இருந்தார். கிருஷ்ணராஜா தொகுதியில் எஸ்ஏ ராமதாஸ் வெற்றி பெற்று இருந்தார். ஈஸ்வரப்பா, ஜகதீஷ் ஷெட்டார் இருவரும் கட்சியில் செல்வாக்கு இழந்த நிலையில் தாங்களாகவே ஒதுங்கிக் கொண்டனர். ஆனால், ஜகதீஷ் ஷெட்டார் டெல்லி சென்று மேலிடத்தில் சீட் கேட்டு அழுத்தம் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. 

விவசாயியை திருமணம் செஞ்சுக்கர பெண்களுக்கு ரூ.2 லட்சம்... மதசார்பற்ற ஜனதா தளம் வாக்குறுதி!!

தற்போதைய அமைச்சர் எஸ்.அங்காரா சீட்டை இழந்துள்ளார். இருப்பினும், மற்றொரு அமைச்சரான ஆனந்த் சிங், அவருக்குப் பதிலாக விஜயநகரத் தொகுதியில் தனது மகனுக்கு டிக்கெட் வழங்கக் கோரியதால், சித்தார்த்தா சிங்குக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால், ஹோஸ்கோட்டில் தனது மகனுக்கு டிக்கெட் வழங்கக் கோரிய அமைச்சர் எம்டிபி நாகராஜின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவருக்கு சீட்டு வழங்கப்பட்டது. இந்த வேட்பாளர்கள் அனைவரும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் பிரதமர் மோடிக்கு சாதகமான சூழல் தற்போது நிலவி வருகிறது. மாநிலத்தின் கர்நாடகா தலைவர்களை விட மோடிக்கான மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது என்று சமீபத்திய  கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதன் அடிப்படையிலும் வேட்பாளர் தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

click me!