
‘உங்களின் ‘பாஸ்’(பிரதமர் மோடி) உங்களை பேசவிடாமல் மவுனமாக்கியதுதான் உண்மையில் வெட்கக்கேடு’ என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலாவுக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
ரபேல் போர்விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் கட்சி கூறுவது வெட்கக்கேடு என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருந்தநிலையில், அதற்கு ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.
ரபேல் ஒப்பந்தம் ரத்து
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 126 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்ஸின் டிசால்ட் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ரத்து செய்தது.
ஊழல்
36 ரபேல் போர் விமானங்களை உடனடியாக வாங்குவதற்காக பிரான்சின் டிசால்ட் நிறுவனத்துடன் பிரதம் மோடி ஒப்பந்தம் செய்தார். இந்த விமானங்களை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த விமானங்களை வாங்குவதில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
ெவட்கக்கேடானது
இதற்கு பதில் அளித்து நேற்றுமுன்தினம்பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரபேல் போர் விமானத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறுவது வெட்கக்கேடானது. வெளிப்படையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது’’ என்று பதில் அளித்தார்.
ராகுல் பதில்
நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி தரும் வகையில் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று கருத்து தெரிவித்து, சில கேள்விகளையும் முன்வைத்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது-
மவுனியாக்கிவிட்டார்
திருமதி நிர்மலா சீதாராமன், உங்களின் பாஸ்(பிரதமர் மோடி) உங்களை பேசவிடாமல் மவுனியாக்கிவிட்டார். இதற்கு வெட்கப்பட வேண்டும். எங்களின் 3 கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.
3 கேள்விகள்
1. ரபேல் போர் விமானங்களின் உண்மையான இறுதி விலை என்ன?
2. பாரிஸ் நகரில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் செய்வதற்கு முன், பிரதமர் பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் அனுமதியை பெற்றாரா?
3. அரசு நிறுவனமான இந்தியன் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்தீர்கள்?, பாதுகாப்பு துறையில் முன் அனுபவமே இல்லாத ஏ.ஏ தொழில் அதிபரின் (அனில்அம்பானி) நிறுவனத்துக்கு ஒப்பந்தம் எப்படி கொடுத்தீர்கள்?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.