Chandrayaan3 mission இஸ்ரோ தலைவர்: யார் இந்த சோம்நாத்?

By Manikanda Prabu  |  First Published Aug 22, 2023, 11:43 PM IST

நிலவில் சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் லேண்டர் தரையிறங்கவுள்ள நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்


நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23 தேதியன்று (நாளை) மாலை 6.04 மணியளவில் சந்திரயானின் லேண்டர் கலனை மென்மையாக  தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. முதலில் லேண்டர் தரைம் இறக்கியதும் அதிலிருந்து இறங்கும் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தியாவின் கனவு திட்டமான நிலவை ஆராயும் சந்திரயான் பயணத்தின் மூளையாக கருதப்படுபவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத். ஆதித்யா-எல்1 மற்றும் ககன்யான் ஆகியவற்றில் அவரது பணிகளுக்காகவும் பாரட்டப்பட்டவர்.

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் எஸ்.சோமநாத். இஸ்ரோவின் தலைவர் பதவியை வகிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த 4ஆவது நபர் ஆவார். ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரான ஸ்ரீதர பணிக்கர் சோமநாத், கேரளாவின் துறவூரில், இந்தி ஆசிரியர் ஸ்ரீதர பணிக்கர் மற்றும் தங்கம்மா ஆகியோரின் மகனாக ஒரு மலையாளி குடும்பத்தில் 1963ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர். 

திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மையம் மற்றும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக சோம்நாத் பதவி வகித்துள்ளார். ஏவுகணை வாகனங்களின் வடிவமைப்பில், குறிப்பாக கட்டமைப்பு இயக்கவியல், கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் பைரோடெக்னிக்ஸ் ஆகிய துறைகளில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக புகழ்பெற்றவர்.

கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த டாக்டர் எஸ்.சோம்நாத், மலையாளம் மொழி வழிக் கல்வியில் பள்ளிப்படிப்பு படித்த காலத்திலிருந்தே அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்தார். சோமநாத்தின் தந்தை ஹிந்தி கற்பித்தாலும், சிறுவன் சோம்நாத்தின் அறிவியல் ஆர்வத்தையும், திறமையையும் ஊக்குவித்து, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அறிவியல் இலக்கியங்களைக் கற்றுக் கொடுத்தார்.

சோமநாத் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பைத் தொடர முடிவு செய்தார். அந்த சமயத்தில் அது எளிதான தேர்வு அல்ல என்ற போதிலும், அந்த நேரத்தில்தான் அவர் விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் தனது ஆர்வத்தை மேலும் வலுப்படுத்தினார். அரூரில் உள்ள செயின்ட் அகஸ்டின் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற சோமநாத், எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய பட்டப்படிப்பை முடித்தார். கேரளாவின் கொல்லத்தில் உள்ள தங்கல் குஞ்சு முசலியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த சோம்நாத், பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில், இயக்கவியல் மற்றும் கட்டுப்பாட்டில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

விக்ரம் லேண்டரை தரையிறக்க புது யுக்தியை கையாளும் ISRO - சந்திரயான் 2க்கும் இதற்கும் என்ன வேறுபாடு தெரியுமா?

இந்தியாவின் செயற்கைக்கோள் திட்டத்திற்காக ராக்கெட் மற்றும் விண்வெளி வாகனங்களில் கவனம் செலுத்தும், திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 1985 ஆம் ஆண்டில் சோம்நாத் பணியாற்றத் தொடங்கினார். பிஎஸ்எல்வி ராக்கெட்டின் ஆரம்ப ஒருங்கிணைப்பு பணிகளை மேற்பார்வையிட்ட அவர், 2003 ஆம் ஆண்டில் GSLV Mk-III திட்டத்தில் இணைந்தார். 2010ஆம் ஆண்டில் GSLV Mk-III ஏவுகணை வாகனத்திற்கான திட்ட இயக்குநராகவும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இணை இயக்குநராகவும் (திட்டங்கள்) நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு நவம்பர் வரை உந்துவிசை மற்றும் விண்வெளி ஆணையத்தின் துணை இயக்குநராகவும் இருந்தார். திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (LPSC) தலைமைப் பொறுப்பை 2015ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்ட அவர், 2018ஆம் ஆண்டு ஜனவரி வரை அப்பெறுப்பில் இருந்தார்.

ஏவுகணை வாகனங்களின் வடிவமைப்பில், குறிப்பாக கட்டமைப்பு இயக்கவியல், கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் பைரோடெக்னிக்ஸ் ஆகிய துறைகளில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக சோம்நாத் புகழ்பெற்றவர். அதுதவிர, அதிக உந்துதல் கொண்ட செமி கிரையோஜெனிக் எஞ்சின், சந்திரயான்-2 நிலவு ஆராய்ச்சி லேண்டருக்கான த்ரோட்டில் எஞ்சின்கள் மற்றும் ஜிசாட்-9 எலக்ட்ரிக் ப்ரொபல்ஷன் சிஸ்டத்தை வெற்றிகரமாக ஏவுவதற்கும் அவர் தலைமை தாங்கினார்.

இஸ்ரோவின் தலைவரான சிவன் பொறுப்பேற்றபிறகு, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்ற சோம்நாத், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி, சிவன் ஒய்வுபெற்ற பிறகு, இஸ்ரோவின் 10ஆவது தலைவராக பொறுப்பேற்றார். கடந்த ஒரு வருடமாக இஸ்ரோ தலைவராக பணியாற்றி வரும் சோம்நாத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதேபோன்று, சந்திரயான்-3 லேண்டர், ரோவர் ஆகியவை வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு இந்தியா புதிய மைல்கல்லை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!