
கர்நாடகாவில் இருந்து 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை தமிழ்நாட்டுக்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இதனால், காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் சூழல் உள்ளதால், தண்ணீரை திறந்து விடக் கோரினாலும், அதற்கு கர்நாக அரசு செவி மடுக்க மறுக்கிறது.
எனவே, நிலுவையில் உள்ள காவிரி நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, “காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. எனவே இந்த மனுவை மிகவும் அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும்.இந்த மனுவை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க வேண்டும்” என தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.
பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி!
அதற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இவ்வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வினை அமைப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், காவிரி வழக்கு தொடர்பாக விசாரிக்க புதிய அமர்வை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி ஆர் கவாய், நரசிம்மா, பி.கே.மிஷ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு மீதான விசாரணை வருகிற 25ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நிலுவை நீரை வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் இருந்து 10,000 கன அடி நீரை அம்மாநில அரசு திறந்து விட்டது. கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக விநாடிக்கு 22 ஆயிரத்து 401 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்து விட்டதற்கு கர்நாடக மாநில பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அங்கு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.