Chandrayaan 3: நிலவின் தென்துருவத்தில் என்ன இருக்கிறது? ஏன் இஸ்ரோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது?

By Dhanalakshmi GFirst Published Jul 14, 2023, 10:53 AM IST
Highlights

சந்திரயான் 3 விண்கலத்தைத் தாங்கிச் செல்லும் எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட்டின் கவுண்ட்டவுன் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று மதியம்1 மணிக்கு தொடங்கியது. 25½ மணி நேர கவுண்ட்டவுனுக்குப் பின்னர் இன்று பிற்பகலில் விண்கலம் தனது நிலவு பயணத்தை துவங்குகிறது. 

சந்திரயான் 3 விண்கலம் இன்று மதியம் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து தனது நிலவு பயணத்தை துவங்குகிறது. விண்கலத்தில் அனைத்து பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டு, ஏவுவதற்கு தயார் நிலையில் உள்ளது. 

எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் 'புரபுல்சன்' என்ற முக்கியப் பகுதியைக் கொண்டுள்ளது. இது விண்கலத்தில் உள்ள பிரக்யான் என்று பெயரிடப்பட்டு இருக்கும் ரோவர், விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டர் பகுதிகளை நிலவில் 100 கி.மீ. தொலைவு வரை கொண்டு சென்று இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லேண்டர் பகுதி தான் நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதி. இதில்தான் கடந்த முறை தவறு ஏற்பட்டது. 

Latest Videos

கடந்த முறை நிலவில் இறங்கிய சந்திரயான் 2 முழு வெற்றியை பெறாவிட்டாலும், பாதி வெற்றியை பெற்று இருந்தது. நிலவின் மேல் பகுதியில் இறங்கும்போது, மென்மையாக இறங்க வேண்டிய ரோவர் மற்றும் லேண்டர் இரண்டும் வேகமாக இறங்கியது. இதனால், அவற்றின் கால்கள் உடைந்தன.

எப்போது நிலவில் இறங்கும்?
இந்த நிலையில்தான் சந்திரயான் 3 மூன்று இன்று நிலவுக்கு செல்கிறது. 30 நாட்களில் நிலவில் இந்த விண்கலம் இறங்கி தனது பணியைத் துவக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் ரோவர், பிரக்யான் மற்றும் லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும். சந்திரயான் -2 இறக்குவதற்கு முயற்சித்த அதே இடத்தில் சந்திரயான் -3 ஐ இறக்குவதற்கு அதாவது தென் துருவத்தில் 70 டிகிரி அட்சரேகைக்கு அருகில் இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. 

சாதனை, சவால்:
இந்த முறை திட்டமிட்டபடி சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கினால், உலகின் முதல் தென் துருவ நிலவு பயணமாக இருக்கும். இதுவரை, அனைத்து விண்கலங்களும் நிலவின் பூமத்திய ரேகையில் அல்லது சில டிகிரி தென்துருவத்தில் இருந்து விலகி தரையிறங்கியுள்ளன. அல்லது வடக்குப் பகுதியில் தரையிறங்கியுள்ளன.

தென் துருவம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
நிலவின் தென் துருவம் மிகவும் கரடுமுரடானது. வெளிச்சம் இருக்காது. இருட்டாக இருக்கும். சூரிய ஒளி எப்போதும் இங்குபட்டது இல்லை. இது மிகவும் குளிர்ச்சியான பகுதியாக - 230 டிகிரி செல்சியசில் இருக்கும். இருட்டாக இருப்பது, மிகவும் குளிர்ச்சியான பகுதியாக இருப்பது இவை இரண்டுமே மின்சாதன பொருட்கள் இயங்குவதற்கு சவாலாக இருக்கும். இத்துடன் தென் துருவம் பெரிய பள்ளங்களால் நிரம்பியுள்ளது, இது சில ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கூட நீண்டுள்ளது. 

நிலவின் தென் துருவத்தில் ஆராய என்ன இருக்கிறது?

மேலே குறிப்பிட்டுள்ளபடி, இங்குள்ள கடினமான சூழல் சோதனைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள கடினமாக்குகிறது. இதன் கண்டுபிடிப்புகள் உலகை ஆச்சரியப்பட வைக்கலாம். மேலும், இந்தியாவின் 2008 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட சந்திரயான்-1, நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை வெளிப்படுத்தியது.

தவிர, தென் துருவத்தில் உள்ள நிலவும் அதீத குளிர், இந்தப் பகுதியில் காணப்படும் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உறைந்து இருக்கும் பனிக்கட்டிகள் நிலைமையை நமக்கு எடுத்துரைக்கும்.  எனவே, நிலவின் இந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்படும் மண் மற்றும் பாறைகள் ஆரம்பகால சூரிய குடும்பத்திற்கான குறிப்புகளை வழங்குவதற்கு சான்றுகளாக இருக்கலாம். 

click me!