
உலகம் முழுவதும் தொழில்நுட்பத்துறையில் தற்போது அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று செயற்கை நுண்ணறிவு (AI). செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கணினி, கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது ஒரு மென்பொருளை மனித மனதைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் ஒரு முறையாகும். 2035 ஆம் ஆண்டுக்குள் உலகப் பொருளாதாரத்திற்கு 15.7 டிரில்லியன் டாலர்களை AI பங்களிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வரவுக்கு பின்னர் உலகில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மனித உழைப்பைக் குறைப்பதற்காக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் வாய்ப்புள்ளதாகவும், பலரும் வேலைகளை இழந்து விட்டதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி வருகிறது. இதன் பாதிப்பை உணர்ந்த பல்வேறு நாடுகள் செயற்கை நுண்ணறிவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு வருகின்றன.
இதனால், Chatgpt என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை கண்டுபிடித்த OPEN AI என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளார். இந்தியா, இஸ்ரேல், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். மேலும், தங்களது நிறுவனத்தின் தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை பாதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியா வந்த OPEN AI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து அவர் பிரதமர் மோடியுடன் விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது. செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியுடனான சந்திப்பில் விவாதித்ததாக சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.
Alert : இந்த பிரபலமான 10 ஆண்ட்ராய்டு குளோன் செயலிகளை உடனே டெலிட் பண்ணுங்க.. இல்லையெனில் ஆபத்து..
பிரதமர் மோடியைச் சந்தித்து செயற்கை நுண்ணறிவின் (AI) குறைபாடு, அதை ஏன் கவனிக்க வேண்டும், செயற்கை நுண்ணறிவு மூலம் இந்திய தொழில்நுட்பத்துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் பற்றி பேசியதாக டெல்லி ஐஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.
“செயற்கை நுண்ணறிவு மூலம் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. மனிதகுலம் இதுவரை உருவாக்கிய மிக முக்கிய மாற்றத்தக்க தொழில்நுட்பங்களில் ஒன்றாக செயற்கை நுண்ணறிவு இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.