மத்திய அமைச்சரவை மாற்றம்? பாஜகவின் அதிரடி திட்டம்!

By Manikanda Prabu  |  First Published Jun 9, 2023, 11:27 AM IST

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான முதற்கட்ட ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து அரியணையை பிடித்த பாஜக, மூன்றாவது முறையும் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. 2024 தேர்தலில் பாஜக வெற்று பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியமைப்பார் என அமித் ஷா சூளுரைத்துள்ளார். அதேசமயம், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றன. பலம் வாய்ந்த பாஜகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், காங்கிரஸை இணைத்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்பொருட்டு, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியினை பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு  வருகிறார். எதிர்க்கட்சிகள் கூடும் கூட்டம் அம்மாநிலத் தலைநகர் பாட்னாவின் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. எதிர்கட்சிகள் ஓரணியில் இணைவது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

அதேசமயம், எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் வகையில், பல்வேறு  திட்டங்களை பாஜகவுக்கும் வகுத்து வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, போட்டியிடும் தொகுதிகள், தேர்தல் வியூகங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதால் கூட்டணியில் சில புதிய கட்சிகளை சேர்க்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சிரோமனி அகாலி தளம், அதிமுக, தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதாதளம், உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியை மாற்ற திட்டமா.? வெளியான பரபரப்பு தகவல்

இதனிடையே, தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு கட்சியிலும், ஆட்சியிலும் சில அதிரடி மாற்றங்களுக்கு பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி, மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. வேளாண்மை, விமானப் போக்குவரத்து, நிதித்துறை, நீர்ப் பாசனம், சுற்றுச்சூழல், மின்சாரம், ஊரக மேம்பாடு ஆகிய அமைச்சகங்களில் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது. அமைச்சரவையில் இருந்து நீக்கப்படும் மத்திய அமைச்சர்கள் கட்சிப்பணிகளுக்கு அனுப்பவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, கட்சியின் முக்கிய பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கட்சி நிர்வாகிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னதாக, அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் கடந்த திங்கள்கிழமை டெல்லியில் சந்தித்து ஆலோசித்துள்ளனர். இந்த திடீர் சந்திப்பின்போது, பாஜகவின் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோசும் உடனிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில், கூட்டணி, கட்சி நிர்வாகிகள் மாற்றம், அமைச்சரவை மாற்றம், பாஜகவின் மிஷன் சவுத் (தென்னிந்தியாவை கைப்பற்றும் திட்டம்) உள்ளிடவைகள் குறித்து விவாதிக்கட்டதாகவும் கூறப்படுகிறது.

click me!