
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் 50 சதவீதம் பென்ஷன் கிடைப்பதை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (Unified Pension Scheme) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ளது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால், அவர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள். ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வுதியம் முடிவு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தில் உறுதிசெய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியமும் அடங்கும். பணியாளர் ஒருவர் பணியில் இறந்துவிட்டால், அவரது ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தை அவரது குடும்பத்தினர் உடனடியாகப் பெறலாம். மேலும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைப்பதும் இத்திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள்: ககன்யான் முதல் இந்திய விண்வெளி நிலையம் வரை!
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தவிர, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (டிஎஸ்டி) நிர்வகிக்கப்படும் ‘விக்யான் தாரா’வின் கீழ் மூன்று திட்டங்களைத் தொடரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
15வது நிதிக் குழுவின் கீழ் 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் இந்த திட்டத்திற்கு ரூ.10,579.84 கோடி செலவாகும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இத்திட்டம் நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு முன்முயற்சிகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.