
லக்பதி திதி திட்டம் என்பது பிரதமர் மோடி அவர்களால் அவரது சுதந்திர தின உரையின் போது அறிவிக்கப்பட்ட திட்டமாகும். இதில் இந்திய பெண்கள் பலரும் பெரிய அளவில் பயனடைய முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது பட்ஜெட் உரையில் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் இலக்கானது 2 கோடி ரூபாயிலிருந்து மூன்று கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Interim Budget 2024 | இடைக்கால பட்ஜெட்
லக்பதி திதி திட்டம் என்றால் என்ன?
இந்த திட்டம் நாடு முழுவதும் இருக்கின்ற கிராமங்களில் உள்ள 2 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பெண்களுக்கு பிளம்பிங், LED பல்பு தயாரித்தல், ஆளில்லா விமானங்களை இயக்குதல் மற்றும் அதனை பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டமானது ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கின்ற சுய உதவி குழுக்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேர என்ன தகுதி வேண்டும்?
இந்த திட்டத்தில் சேர வயதுவரம்பு கிடையாது, சபா பாரதிய மகிலா திட்டத்தின் கீழ் பலன்களை பெறலாம். இதற்கு பெண்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களில் முதலில் சேர வேண்டும். பெண்கள் முதலில் தங்களுக்கு என்று சுய உதவி குழு வணிகத் திட்டத்தை தயாரிக்க வேண்டும். இந்த வணிக திட்டம் தயாரான பிறகு சுய உதவி குழுக்களின் மூலம் அவர்களுடைய விண்ணப்பங்கள் அரசுக்கு அனுப்ப வேண்டும்.
அந்த விண்ணப்பங்களை அரசு பரிசீலனை செய்து ஏற்றுக் கொண்டால் இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் பயனடையலாம். பல மாநிலங்களில் வட்டியில்லா கடனாக 5 லட்சம் ரூபாய் வரை பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
திட்டத்தில் சேர என்னென்ன சான்றிதழ்கள் வேண்டும்?
இந்த திட்டத்தில் இணைய பெண்கள் தங்களது ஆதார் கார்டு, பான் கார்டு, முகவரி ஆதாரம், வருமான சான்றிதழ், மொபைல் எண், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களோடு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்து இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.