Interim Budget 2024 | இடைக்கால பட்ஜெட்!

By Swaminathan Gurumurthy  |  First Published Feb 9, 2024, 4:48 PM IST

2024-25 இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரிகள், புதிய திட்டங்கள், சலுகைகள், செலவினங்கள் இல்லை. அமலில் இருக்கும் பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 3 கோடி வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. 


கடந்தவாரம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட், 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் அல்ல. அரசியல் மரபுப்படி அதில் புதிய வரி, புதிய சலுகைகள் எதையும் அறிவிக்கக் கூடாது. தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவிக்கு வரும் அரசாங்கம்தான், வரும் ஆண்டு முழு பட்ஜெட்டை சமர்ப்பிக்கும். எனவே, இடைக்கால பட்ஜெட் கடந்த காலக் கணக்காகத்தான் இருக்கும். அதில் புதிய செலவினங்கள் எதுவும் இருக்காது என்பதால், இடைக்கால பட்ஜெட் என்பது 2014 வரை ஒரு விசேஷ செய்தியாகவே இருந்ததில்லை. 2014-ல் தான் இடைக்கால பட்ஜெட் செய்தியாகியது. ஏன்? 2014-15-ல் ப.சிதம்பரம் சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டில் மரபை மீறி சலுகைகள், செலவினங்களை அறிவித்ததால் அது செய்தியாகி விவாதிக்கப்பட்டது. அதுபோல் 2019-20 பட்ஜெட்டில் மோடி அரசு புதிய செலவினங்களை அறிவித்தது செய்தியானதால் அதுவும் விவாதிக்கப்பட்டது. இப்படித்தான் இடைக்கால பட்ஜெட்களை விவாதிப்பது தொடங்கியது. 

மறந்த மரபு

இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரி, சலுகை செலவினங்கள் போன்றவற்றை அறிவிக்கக் கூடாது என்ற மரபின் அடிப்படைக்குக் காரணம், தேர்தலுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவிக்கு வரும் அரசாங்கத்தின் மீது, தேர்தலுக்கு முன் ஆட்சி செய்யும் அரசாங்கம் எந்தவிதமான பாரத்தையும் சுமத்தக் கூடாது என்பதே. 2014-ல் காங்கிரஸின் ஆட்சிக்கால இறுதியில் ப.சிதம்பரம் சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டில், தேர்தலை மனதில் வைத்து வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு நல்ல மரபை மீறியது. அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அது மரபை மீறிய செயல் என்று கண்டனம் செய்தார். 2019-ல் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்த மோடி அரசும், அதே போல் மரபை மீறி விவசாயிகளுக்கு உதவித்தொகை அறிவித்தது. இரண்டுமே தேர்தலுக்குப் பிறகு வரும் அரசாங்கத்தின் மீது ஆளும் அரசு சுமத்திய பாரம் என்றுதான் கூறவேண்டும். 2014-ல் மரபை மீறிய காங்கிரஸால், 2019-ல் மோடி அரசு மரபு மீறியதை ஆட்சேபிக்க முடியவில்லை. ஊடகங்கள் கூட அது பற்றி விமர்சனம் செய்யவில்லை. இப்போது சமர்ப்பிக்கப் பட்ட 2024-25 இடைக்கால பட்ஜெட், மரபுப்படி வரி, சலுகை செலவினங்களைத் தவிர்த்திருக்கிறது. ஆனால் இந்த இடைக்கால பட்ஜெட் விமர்சனங்களில் கூட, செலவினங்களைத் தவிர்த்து, பற்றாக்குறையைக் குறைத்து அரசு பொறுப்பாக பட்ஜெட் சமர்ப்பித்திருக்கிறது என்று வழக்கமான விமர்சனங்கள் வந்தனவே தவிர, இந்த இடைக்கால பட்ஜெட் மரபுப்படி அமைந்திருக்கிறது என்பதை யாரும் சுட்டிக்காட்டவே இல்லை. இந்த இடைக்கால பட்ஜெட் மரபை ஒட்டியிருக்கிறது என்பதைக் கூறி, அந்த நல்ல மரபை நாம் நினைவூட்டுகிறோம்.

பட்ஜெட் 2024-25

2024-25 இடைக்கால பட்ஜெட்டில் புதிய வரிகள், புதிய திட்டங்கள், சலுகைகள், செலவினங்கள் இல்லை. அமலில் இருக்கும் பிரதம மந்திரியின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 3 கோடி வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. வரும் 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று கூறி, அதற்கு ரூ. 80,600 கோடி - நடப்பு ஆண்டைவிட ரூ. 1,000 கோடி கூடுதல் - ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முதலீட்டுக்கு ரூ.15 லட்சம் கோடி - 2.3 லட்சம் கோடி அதிகம் - ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 2019-20 பட்ஜெட்டில் விவசாயிகளுக்குச் சலுகை அளித்தது போல் இந்த பட்ஜெட்டில் மோடி அரசு எந்தச் சலுகையும் அளிக்காதது, வரும் தேர்தலில் மோடி வெற்றி பெறுவார் என்ற பா.ஜ.க.வின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

10-ஆண்டு சாதனை

2024-25 இடைக்கால பட்ஜெட் பா.ஜ.க.வின் 10 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறும் அரிய வாய்ப்பாக மாறியது. அதை பா.ஜ.க. முற்றிலும் பயன்படுத்தியது. காங்கிரஸின் 10 ஆண்டு (2004-14) ஆட்சியுடன் மட்டுமல்லாமல், 1950 முதல் 64 ஆண்டுகள் நடந்த அனைத்துக் கட்சிகளின் ஆட்சிகளுடனும் ஒப்பிட்டு, தன் சாதனைகள் எவ்வளவு மகத்தானது என்பதைப் படம் பிடித்துக் காட்டியது பா.ஜ.க. அரசு. உதாரணமாக, 1950 முதல் 2014 வரையிலான 64 ஆண்டுகளில் நிறுவப்பட்ட ஐ.ஐ.டி. 16, மோடி ஆட்சியில் 7; எய்ம்ஸ் மருத்துவமனை 7, மோடி ஆட்சியில் 15; 2014 வரை நிறுவப்பட்ட பல்கலைக் கழகங்கள் 723, மோடி ஆட்சியில் 390; விமான நிலையங்கள் 74, மோடி ஆட்சியில் 74.
அதாவது, 64 ஆண்டுகளில் அனைத்து அரசுகளும் சாதித்ததை விட மோடி, 10 ஆண்டுகளில் அதிகமாகச் சாதித்திருக்கிறார் என்பதை பா.ஜ.க. எடுத்துக் கூறியது. தவிர, 10-ஆண்டு காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும் போது, மோடி ஆட்சியில் அரசு வருமானம் ஏறக் குறைய 3 மடங்கு வளர்ந்து, 2014-ல் 29% ஆக இருந்த பன்முக ஏழைகளின் எண்ணிக்கை 11.3% ஆகக் குறைந்து, 25 கோடி பேர் பன்முக ஏழ்மையிலிருந்து வெளிவந்தனர் என்று கூறினார் நிதி அமைச்சர்.

அரசு முதலீடு உள்நாட்டு உற்பத்திக் (ஜி.டி.பி.) கணக்கில் 2014-ல் 4% லிருந்து 2022-23-ல் 18% ஆகப் பெருகியது; மேல் படிப்பு படிக்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகமாகி, விஞ்ஞான - தொழில்நுட்பக் கல்வி படிக்கும் பெண்கள் 43% அதிகமாகினர்; வேலை மற்றும் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையும் 50% கூடியது; 43 கோடி பேருக்கு ரூ. 22.5 லட்சம் கோடி முத்ரா கடன் - இதில் 30 கோடி பேர் பெண்கள்; வீடுகள் இல்லாத 3 கோடி பேருக்கு வீடுகள் - இதில் 70% பெண்கள்; 10 கோடி வீடுகளுக்கு இலவச சமையல் கேஸ்; 11 கோடி வீடுகளுக்கு கழிவறைகள்; உஜாலா திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு மின்சாரம் குறைவாகச் செலவாகும் 38 கோடி LED பல்புகள்; தெருக்களுக்கு 1.3 கோடி LED ட்யூப்புகள்; 1.4 கோடி இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு திறன்வளர்ச்சிப் பயிற்சி; ஒரு கோடி பெண்களுக்கு 83 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன்; தெருக்களில் வியாபாரம் செய்யும் 78 லட்சம் பேருக்கு கடன்; வங்கிக் கணக்கு இல்லாத 50 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் மூலம் எந்தவித கசிவும் இல்லாமல் நேரடியாக 11.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.81 லட்சம் கோடி; மற்ற பயனாளிகளுக்கு ரூ.2.7 லட்சம் கோடி பட்டுவாடா; கொரோனா காலத்துக்குப் பிறகு வேலையின்மை 6.1% லிருந்து 3.2% ஆகக் குறைவு - என்று மோடி அரசின் பிரம்மாண்டமான சாதனைகளைப் பட்டியலிட்டார் நிர்மலா. பட்ஜெட் பற்றிய ஊடகங்களின் விவாதம் பா.ஜ.க. சாதனை பற்றிய பிரசாரமாக மாறியது.

மோடி ஆட்சியில் நாடு அபார வளர்ச்சி கண்டதால்தான் 2014-ல் உலகப் பொருளாதாரத்தில் 10-ஆம் இடத்தில் இருந்த பாரதம், 10 ஆண்டுகளில் பிரேஸில், பிரிட்டன், ஃபிரான்ஸ், கனடா, இத்தாலி ஆகிய நாடுகளைக் கடந்து முன்னேறி, இப்போது 5-ஆம் இடத்தை அடைந்திருக்கிறது. 20 ஆண்டுகளாக வருடாந்திர வளர்ச்சியில், உலகில் முதலாவதாக இருந்த சீனாவைக் கடந்து பாரதம் இப்போது முதல் இடத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் நம்மைத் துச்சமாக மதித்த ஐ.எம்.எஃப்., உலக வங்கி போன்ற அமைப்புகள், உலக வளர்ச்சியின் இஞ்ஜின் என்று கொண்டாட, உலகில் அனைவரும் மதிக்கும் நாடாக பாரதம் மாறியிருக்கிறது. முக்கியமான 22 உலகத் தலைவர்களில் மோடிதான் பிரபலமானவர் என்று ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கூறி வருகிறது பிரபல அமெரிக்க மார்னிங் கன்ஸல்ட் ஆய்வு அமைப்பு. மோடி துவேஷக் கட்சிகள் அவரைத் தூற்றத் தூற்ற அவர் பிரபலமாகி வருகிறார். இதற்குக் காரணம், அவரது அயராத உழைப்பு, அவரது அரசின் சாதனைகள் என்பதை அவர்கள் உணர வேண்டும். அது அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

Note to the Reader: This article originally appeared in Thuglak Tamil Weekly Magazine www.gurumurthy.net. It has been reproduced in Asianet News Network.

Tap to resize

Latest Videos

click me!