ரூ. 500 நோட்டை பயன்படுத்தும் காலக்கெடு நீட்டிப்பு ? உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு

First Published Dec 16, 2016, 6:58 PM IST
Highlights


ரூ. 500 நோட்டை பயன்படுத்தும் காலக்கெடு நீட்டிப்பு ?

உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு

புதுடெல்லி, டிச. 16-

பழைய ரூ.500 நோட்டை பயன்படுத்தும் காலக்கெடுவை நீட்டித்து உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடுமுழுவதும் வங்கிகள், ஏ.டி.எம்.கள் முன் மக்கள் வரிசையில் நிற்பதை குறைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. 

மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதைத்தொடர்ந்து மக்கள் பணம் பெறவும், ரூபாய் நோட்டுகளை மாற்றவும் வங்கிகள் முன், ஏ.டி.எம். முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதில் ரூ. 500 நோட்டு பயன்படுத்தும் காலக்கெடுவும் 15-ந்தேதியோடு  முடிந்தது. 

இந்நிலையில், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல் வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகளை ஒரே வழக்காக உச்சநீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. 

இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்த போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதிடுகையில்,  ரூ. 500 நோட்டுகளை திரும்பப் பெறுவது, ரூபாய் நோட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. அவ்வாறு பிறப்பித்தால், அது, நாட்டில் கருப்பு பணம்  பதுக்குவதற்கு கூடுதலாக வழிவகுக்கும் எனக் கேட்டுக்கொண்டார். 

அப்போது நீதிபதிகள் கடுமையாக மத்தியஅரசை கண்டித்தனர். ரூபாய் நோட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும், இன்னும் சாமானிய மக்களுக்கு போதுமான அளவு ரூபாய் கிடைக்கவில்லை. இந்த விசயத்தில் மத்தியஅரசின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. சாமானிய மக்கள் புதிய ரூபாய் நோட்டுகளை பெற முடியவில்லை. ஆனால், பெரும் பணக்காரர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என கடுமையாக கண்டித்தனர். 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.கள் முன் நீண்ட வரிசையில் நிற்கும் சிரமத்தை குறைக்கும் வகையில், ரூ. 500 நோட்டை பயன்படுத்தும் காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பான முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!