சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சிறப்பு காவல் படையினர் 11 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாண்டேவாடாவில் உள்ள அரன்பூர் சாலையில் இன்று பிற்பகல் ரோந்து சென்ற குழுவினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்த நிலையில், அங்கு சிறப்பு காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுட்டனர். தேடுதலை தொடர்ந்து ராணுவத்தினர் திரும்பிய போது நக்சல்கள் ஐஇடி வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 11 சிறப்பு காவல் படை வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் சத்தீஸ்கர் காவல்துறையின் சிறப்புப் படையான மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி)யைச் சேர்ந்தவர்கள், மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பயிற்சி பெற்ற உள்ளூர் பழங்குடியினரை உள்ளடக்கியவர்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Fact check : வாகனத்தில் அதிகமாக பெட்ரோல் நிரப்பினால் வெடித்துவிடுமா..? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன..?
எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. பாதுகாப்பு படையினரை தாக்குவோம் என நக்சல்கள் கடந்த வாரம் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 60 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக நக்சல்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து விடுபட்ட ஏழைகளின் சார்பாக தாங்கள் போராடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக கருதப்படும் நக்சல்களை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பகுதி நேர வேலை மோசடி: யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் ரூ. 24 லட்சத்தை இழந்த பெண்..