புலம்பெயர்ந்த இந்தியர்கள் அமெரிக்காவில் 500 சதவீதமும் அமீரகத்தில் 300 சதவீதமும் அதிக வருவாய் ஈட்டுகின்றனர் என உலக வளர்ச்சி ஆய்வறிக்கை சொல்கிறது.
வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கு 120 சதவீதம் கூடுதலாக வருமானம் கிடைக்கும் என்று உலக வளர்ச்சி அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இதுவே உள்நாட்டில் இடம்பெயர்ந்து பணிபுரியும்போது 40% மட்டுமே வருவாய் உயர்வு கிடைக்கும் என்று சொல்கிறது.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த குறைந்த திறமையான இந்தியர்கள் அதிக லாபம் பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் வருமானத்தில் கிட்டத்தட்ட 500 சதவீதம் உயர்வைக் காண்கிறார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பணி நிமித்தமாக இடம்பெயரும் இந்தியர்கள் கிட்டத்தட்ட 300 சதவீதம் அதிகம் வருவாய் ஈட்டுகின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், குவைத் போன்ற வளைகுடா நாடுகளுக்குக் குடிபெயர்பவர்கள் குறைந்த லாபம் பெறுவார்கள் என்கிறது.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்கு இடம்பெயர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள் போன்ற திறமையான பணியாளர்களுக்கு ஆதாயங்கள் மிக அதிகமாக இருந்தாலும், குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள்கூட பல மடங்கு பலன்களை அனுபவிக்கின்றனர். ஒரு நபரிடம் உள்ள திறன்கள் தவிர, வயது, மொழித்திறன் ஆகியவற்றைப் பொறுத்தும் ஆதாயம் மாறுபடுகிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
"இடம்பெயரும் சமூகத்தின் தேவைகளுடன் வலுவாகப் பொருந்தக்கூடிய திறமைகள் மற்றும் பண்புகள் கொண்ட பெரும்பாலான நபர்களுக்கு பெரிய ஊதிய உயர்வுக்கு கிடைக்கிறது. இந்த ஆதாயங்கள் பெரும்பாலும் தாய்நாட்டில் அடையக்கூடியதை விட அதிகமாக இருக்கும். இது உள்நாட்டில் இடம்பெயர்வதிலிருந்து ஒப்பீட்டளவில் சிறந்த பலன்களைக் கொடுக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் தற்போதைய விகிதத்தில், சில நாடுகளில் பணிபுரியும் சராசரியான குறைந்த திறமை கொண்ட நபர், அதிக வருமானம் அளிக்கும் நாட்டிற்கு குடிபெயர்வதன் மூலம் ஈட்டும் வருமானத்தை உள்நாட்டிலேயே ஈட்ட பல பத்தாண்டுகள் ஆகும்” என்று உலக வளர்ச்சி அறிக்கை 2023 எடுத்துரைக்கிறது.
நர்மதா - வைகை நதிகள் இணைந்துவிட்டன! சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்
"ஆனால் இடம்பெயர்வு சிறியதாக இருந்தாலும் செலவு பிடிப்பதாக இருக்கிறது. உதாரணமாக, கத்தாருக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளி இரண்டு மாத வருமானத்தை இடம்பெயர்வுச் செலவுகளை ஈடுகட்டுவதற்கே செலவிடுகிறார். குவைத் செல்பவர்களுக்கு இது இன்னும் கொஞ்சம் அதிகம். குவைத்திற்கு குடிபெயர்ந்த பங்களாதேஷைச் சேர்ந்தவர் குடிபெயர்வுக்கான செலவை சரிக்கடவே ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் ஆகும்" எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.
உலகளவில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 18.4 கோடியாக இருப்பதாக அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இதில் 3.7 கோடி அகதிகளும் அடங்குவர். இது உலக மக்கள்தொகையில் 2.3 சதவீதம் ஆகும். நான்கு வகையான புலம்பெயர்ந்தோர் உள்ளனர் - வலுவான திறன் பொருந்திய பொருளாதாரம் கொண்ட புலம்பெயர்ந்தோர் (அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், வளைகுடா நாடுகளில் கட்டுமானத் தொழிலாளர்கள்), தேவைப்படும் திறன்களைக் கொண்ட அகதிகள் (துருக்கியில் உள்ள சிரிய தொழில்முனைவோர் அகதிகள்), துன்பப்பட்ட புலம்பெயர்ந்தோர் (அமெரிக்காவின் தெற்கு எல்லையில் புலம்பெயர்ந்தோர்) மற்றும் அகதிகள் (வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா).
மெக்ஸிகோ-அமெரிக்கா, சீனா-அமெரிக்கா, பிலிப்பைன்ஸ்-அமெரிக்கா மற்றும் கஜகஸ்தான்-ரஷ்யா, இந்தியா-அமெரிக்கா, இந்தியா-ஜிசிசி மற்றும் பங்களாதேஷ்-இந்தியா ஆகியவை உலகளவில் சிறந்த இடம்பெயர்வு தாழ்வாரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தியா, மெக்சிகோ, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட, அதிக புலம்பெயர்ந்த மக்கள்தொகை கொண்ட சில நாடுகளுக்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளி தனது வருமானத்தில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தை குடும்பத்திற்கு அனுப்புகிறார். பெண்கள் இதைவிட அதிக தொகையை அனுப்புகிறார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள்தொகையில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் குறைவான கருவுறுதல் விகிதம் ஆகியவை காரணமாக இடம்பெயர நேர்கிறது என்று தெரிவிக்கும் உலக வளர்ச்சி அறிக்கை, இதனை சரியான முறையில் நிர்வகித்தால், அனைத்து மக்களுக்கும் நன்மை ஏற்படும் என்றும் வலியுறுத்துகிறது.
சுந்தர் பிச்சை சம்பளம் 1800 கோடி! சராசரி ஊதியத்தை விட 800 மடங்கு அதிகம்!