
மதச் சார்பின்மை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
பதவி நீக்கம்
கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் மக்களவை நேற்று காலை கூடியதும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, மதச் சார்பின்மை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர்.
குல்பூஷன் ஜாதவ்
இதுபோல் பாகிஸ்தான் சென்ற குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினரை பாகிஸ்தான் அவமானப்படுத்தி விட்டதாக கூறி சிவசேனா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவையை நண்பகல் வரை, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்தி வைத்தார்.
இதுபோலவே, மாநிலங்களவையிலும், இதே பிரச்சினையை காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியை அடுத்து முதலில் நண்பகல் வரையிலும் பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
பேசியது என்ன?
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘மதச் சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிகொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள்.
இதுபோன்ற அடையாளம் மூலம்தான் ஒருவர் சுய மரியாதையைப் பெற முடியும். சிலர் தங்களை முஸ்லிம், கிறிஸ்தவர், பிராமணர், லிங்காயத், இந்து என அடையாளப் படுத்திக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், சிலர் மதச்சார்பற்றவர்கள் என கூறும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது'' என பேசினார்.
அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேயின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.