
கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் முதலை ஒன்று சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகிறது. இந்த முதலைக்கு ‘பபியா’ என பெயர்வைத்து அனைவரும் அழைத்து வருகிறார்கள்.
காசர்கோடு மாவட்டம், அனந்தபுரா எனும் கிராமத்தில் மூலஸ்தானம் எனும் கோயில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் மூல ஆதாரமாக இந்த கோயில் நம்பப்படுவதால் இதற்கு மூலஸ்தானம் எனப் பெயர்.
பச்சைப் பசேல் என்று இருக்கும் இந்த கோயில் குளத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை ஒன்று வாழ்ந்து வருகிறது. இதை அங்குள்ள மக்கள் ‘பபியா’ என பெயரிட்டு அழைக்கிறார்கள்.
வழக்கமாக முதலை என்றால் மீன்களையும், நீர், நிலத்தில் வரும் பிராணிகளையும், சில நேரங்களில் மனிதர்களையும் கூட தாக்கி உணவாகக் கொள்ளும் தன்மை கொண்டது.
ஆனால், பபியா முதலை அசைவ உணவுகளை சாப்பிடாமல், கோயிலில் இருந்து கொடுக்கப்படும் பிரசாதம், சைவ உணவுகள், சாதம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்துவருகிறது. இந்த கோயிலுக்கு வரும் மக்கள் கடவுள் கிருஷ்ணரின் அவதாரமாகத் தூதுவராக பார்த்து வணங்கி வருகிறார்கள்.
இந்த கோயிலின் பல ஆண்டுகளாக பணியற்றி வரும் சந்திரசேகரன் ‘பபியா’ முதலை குறித்து கூறுகையில், “ இந்த கோயில் குளத்தில் எனக்கு தெரிந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக பபியா வாழ்ந்து வருகிறாள். இந்த குளத்தில் குளிக்கும் எந்த அர்ச்சகரையும், பக்தர்களையும் பபியாஇதுவரை தாக்கியது இல்லை. குளத்தில் உள்ள மீன்களைக் கூட பபியா சாப்பிடமாட்டாள்.
பபியா காலையிலும், நண்பகலிலும் மட்டுமே உணவு சாப்பிட வெளியே வருவாள். மாலை நேரத்திலும் இந்த முதலையைக் காண பக்தர்கள் ஏராளமான திரள்வார்கள். பபியா முதலை சைவ உணவுகளை மட்டுமே வளர்ந்துள்ளது. கோயிலில் கிடைக்கும் பிரசாதம், சாதம் என நாள் ஒன்றுக்கு இரு முறை பபியாவுக்கு உணவு தரப்படுகிறது. ஒருநேரத்துக்கு ஒரு கிலோ அரிசியை பபியா உணவாகச் சாப்பிடுவாள். பபியாஉணவுக்காக வரும்போது, அதை பெரிய உருண்டையாக வாயில் கொடுத்துவிடுவோம். ஆனால், இதுவரை யாரையும் தாக்கியது கிடையாது’’ என்றார்.
பபியா முதலை குறித்து முதலை ஆய்வாளர் அனிர்பன் சவுத்ரி கூறுகையில், “ முதலைகள் மிகவும் புத்திசாலித்தனமானவை. இது முகர் வகையைச் சேர்ந்த முதலையாகும். இயற்கையிலேயே இது அசைவப் பிராணி.மீன்களையும், நிலப்பகுதி, நீர்வழியில் வரும் விலங்குகளையும், சில நேரங்களில் மனிதர்களையும் கூட தாக்கும் தன்மை கொண்டது.
இப்போது குளத்தில் வாழ்வதால், மீன்களை மட்டுமே பெரும்பாலும் உணவாகக் கொள்ளும். முதலைகளை , நாய்களைக் காட்டிலும் மிக எளிதாக பழக்கவிடலாம். உணவு அளிப்பவரை ஒருபோதும் இந்த முதலை தாக்காது, தனக்கு ஆபத்து ஏற்படும் என உணரும்போது மட்டுமே தாக்கும்’’ எனத் தெரிவித்தார்.