
ெரயில் பயணிகள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
மாநிலங்கள் அவையில் ரெயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோகெயின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்து பேசியதாவது-
இந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் டெல்லி மற்றும் மும்பை இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து 0.99 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 0.68 சதவீதமும் அதிகரித்துள்ளது.
பண்டிகை காலங்கள், விஷேச நாட்கள், விடுமுறை சீசன்களில் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க கூடுதலாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு ரெயில்களில் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தும் ‘பிளக்சி’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2ம் வகுப்பு முன்பதிவுப் பெட்டியில் அடிப்படைக் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக 10 சதவீதமும், அதிகபட்சமாக 30 சதவீதம் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சுவிதா ரெயில்களில் டிக்கெட் கட்டணம் என்பது, தட்கல் கட்டணத்துக்கு இணையாகவே பெறப்படுகிறது. முதல் 20 சதவீத இடங்கள் தட்கல்கட்டணத்திலும், அதன்பின் டிக்கெட் முன்பதிவு அதிகரிப்புக்கு ஏற்ப கட்டணம் உயர்த்தப்படும். இந்த ரெயில்களில் கட்டணம் மிக உயர்வு என்பதால், மிகவும் விழிப்புணர்வுடன் பயணிகள் முன்பதிவு, இருக்கை ஒதுக்கீடு ஆகியவை கண்காணிக்கப்படுகிறது.
இப்போதுள்ள நிலையில், பயணிகள் ரெயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை
இவ்வாறு அவர் தெரிவித்தார்.