தனியார் பஸ்களுக்கு ‘பெர்மிட்’ வழங்குவதில் புதிய மாற்றம் -  மத்திய அரசு அதிரடி...!

First Published Dec 27, 2017, 7:21 PM IST
Highlights
A new change in offering permit to private buses


நாட்டில் இப்போது மாநிலத்துக்கு மாநிலம் பஸ்களுக்கு பெர்மிட் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை கலைந்து, ‘ஒருநாடு, ஒரு பெர்மிட், ஒரே வரி’ எனும் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மாநிலங்கள் அவைக்கான 24 பேர் கொண்ட தேர்வுக்கு குழு மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதாவில் இந்த பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் கடந்த வாரம் மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டன. 

மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்ட தேர்வுக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதாவது- 

ஒரு பஸ்ஸின் உரிமையாளர் ஒருவர்  5 தென் மாநிலங்களில் ‘பெர்மிட்’ பெற்றால் கூட ஆண்டுக்கு ரூ. 42 லட்சம் மட்டுமே கட்டணமாக செலுத்துகிறார்கள். ஆனால், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் ெநடுஞ்சாலைத் துறையின் அளித்த தகவலின்படி, ‘ஒரு நாடு, ஒரு பெர்மிட், ஒரே வரி’ என்ற திட்டத்தை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டால் அவற்றின் வருவாய் அதிகரிக்கும்.

அதேசமயம், ஒரு பஸ்ஸின் உரிமையாளர் ஒரு மாநிலத்தில் மட்டும் பெர்மிட் பெற்று பல பஸ்களை இயக்குவது தடுக்கப்படும்.

கழிவறை கட்டாயம்

மேலும், மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின்படி, நீண்ட தொலைவு செல்லும் பஸ்களில் கண்டிப்பாக கழிவறை இருக்க வேண்டும். இந்த பரிந்துரையை அமல்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடலில் கேமிரா

போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசார், ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தங்கள் உடலில் கேமிராக்களைபொருத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும். இதன் மூலம், சாலை விதிகளை மீறுவோர், மீறும் வாகனங்களை எளிதாக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.குறிப்பாக போக்குவரத்து கண்காணிப்பில் உள்ள அதிகாரிகள், போலீசார், லஞ்சம் பெறுவது கட்டுப்படுத்தப்படும்.

23 ஆயிரம் கோடி லஞ்சம்

ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் லாரி முதலாளிகள், டிரைவர்கள் மூலம் வழங்கப்படும் லஞ்சம் ரூ.10 ஆயிரம் கோடியை எட்டும் என சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு தெரிவித்துள்ளது. 
இதில் ஓட்டுநர் உரிமம் பெறுவது, வரி செலுத்துவது, பெர்மிட் பெறுவது ஆகியவற்றில் நடக்கும் ஊழலையும் சேர்த்தால் ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கோடியை எட்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆன்-லைனில் ஓட்டுநர் உரிமம்

மேலும், ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்பவர்கள்(எல்.எல்.ஆர்.) ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பம் செய்பவர் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, தேரிவிட்டால் சான்றிதழை வாங்க ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வரத்தேவையில்லை, பயிற்சி பெறும் நிறுவனத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்

இவ்வாறு அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!