மத்தியப்பிரதேச மக்களுக்கு அயோத்தி ராமர் கோயிலில் இலவச தரிசனம் என்ற அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருவதுடன், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே இரு முனைப் போட்டி நிலவுகிறது. இதனால், அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ளது. அயோத்தி ராமர் கோயில் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பெரும் பங்கு வகிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், மத்தியப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திலும் ராமர் கோயில் எதிரொலித்துள்ளது.
அம்மாநிலம் குனாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்தியப்பிரதேச மாநில மக்களுக்கு அயோத்தி ராமர் கோயிலில் இலவசமாக தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அனைத்து கோயில்களிலுமே பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள முடியும் என்றபோது, எப்படி அமித் ஷா இதுபோன்ற வாக்குறுதியை அளிக்கிறார் எனவும், ராமர் கோயிலை தேர்தல் அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது எனவும் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் ராமரை தொடர்ந்து தவறாகப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத், அயோத்தி ராமர் கோயிலுக்கு பாஜக மட்டும்தான் உரிமையாளரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு!
இதுகுறித்து அவர் கூறுகையில், “அமித் ஷாவின் வாக்குறுதியை பார்த்தேன். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு இலவசமாக ராமர் கோயில் தரிசனம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த தேசமும் இறைவன் ராமரை வணங்குகிறது. ஆனால், கடவுள் பெயரை பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் தவறாக பயன்படுத்துகிறார்கள். மத்தியப்பிரதேச மக்கள் பாஜகவை தோற்கடித்தால், ராமர் கோயிலில் தரிசனம் செய்ய விடாமல் அம்மாநில மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார். “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் காங்கிரஸ் இடையூறு செய்ததாக அமித் ஷா முதல் பிரதமர் மோடி வரை பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் ராமர் கோயில் பற்றி கூறுயதற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் ராமர் கோயிலின் உரிமையாளரா அல்லது உங்களை ஒரு முகவராக ராமர் நியமித்துள்ளாரா?” எனவும் சஞ்சர் ராவத் காட்டம் தெரிவித்துள்ளார்.