ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கவுதம் சிங்கானியா தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார்
ரேமண்ட் குழுமத்தின் தலைவரும், கோடீஸ்வர தொழிலதிபருமான கவுதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானியாவை பிரிவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர்களது 32 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கவுதம் சிங்கானியா தனக்கு நெருக்கமானவர்களுக்கு மகாராஷ்டிர மாநிலம் தானேவில் தீபாவளி விருந்து வைத்தார். அந்த விருந்தில் கலந்து கொள்ள அவரது மனைவி நவாஸ் மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தனது மனைவியை பிரிவதாக ரேமண்ட் குழுமத்தின் தலைவர் கவுதம் சிங்கானியா அறிவித்துள்ளார்.
தானேயில் உள்ள கவுதம் சிங்கானியாவுக்கு சொத்தான ஜேகே கிராமில் தீபாவளி விருந்து வழங்கப்பட்டது. அதில், கலந்து கொள்ள அவரது மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விருந்துக்கான அழைப்பிதழ் இருந்தும் பாதுகாவலர்கள் தன்னை உள்ளே விட அனுமதி மறுக்கிறார்கள் என கவுதம் சிங்கானியாவின் மனைவி நவாஸ் மோடி குற்றம் சாட்டினார்.
அவரும் மற்றொரு பெண்ணும் விருந்து நடைபெற்ற வளாகத்தின் வாசற்கதவருகே நின்று கொண்டிருந்த வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில், உள்ளே செல்ல வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் சுமார் 3 மணி நேரம் தனது காரில் காத்திருந்ததாக அவர் கூறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு சேவை!
இந்த பின்னணியில், தனது மனைவியை பிரிவதாக கவுதம் சிங்கானியா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த தீபாவளி கடந்த காலத்தில் இருந்ததை போல் இருக்காது. நானும் நவாஸும் வெவ்வேறு பாதைகளில் செல்வோம் என்பது எனது நம்பிக்கை. 32 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, பெற்றோராக வளர்ந்து, எப்போதும் ஒருவருக்கொருவர் பலமாக இருந்துள்ளோம். அர்ப்பணிப்பு, உறுதி, நம்பிக்கையுடன் நாங்கள் பயணித்தோம். சமீப காலங்களில் துரதிர்ஷ்டவசமான விஷயங்களை நடக்கின்றன. பல ஆதாரமற்ற வதந்திகள் பரவி வருகின்றன, எங்கள் வாழ்க்கையைச் சுற்றியுள்ள கிசுகிசுக்கள் நலன் விரும்பாதவர்களால் தூண்டப்படுகின்றன.” என பதிவிட்டுள்ளார்.
எங்களுடைய இரண்டு விலைமதிப்பற்ற வைரங்களான நிஹாரிகா மற்றும் நிசாவுக்கு (அவரது பிள்ளைகள்) சிறந்ததைச் செய்து கொண்டே நான் எனது மனைவியை பிரிகிறேன் என்று தெரிவித்துள்ள அவர், தனது தனிப்பட்ட முடிவுகளுக்கு மரியாதை அளித்து யாரும் தொந்திரவு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இருப்பினும், தங்களது பிரிவுக்கான காரணம், இரண்டு குழந்தைகள் யாருடைய பாதுகாப்பில் இருக்கும் என்பது பற்றிய விவரங்களை கவுதம் சிங்கானியா தெரிவிக்கவில்லை. வழக்கறிஞர் நடார் மோடியின் மகளான நவாஸ் மோடியை கடந்த 1999ஆம் ஆண்டு கவுதம் சிங்கானியா திருமணம் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.