கால் முறிந்தும் ஆம்புலென்சில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி

By SG BalanFirst Published Mar 21, 2023, 8:26 PM IST
Highlights

மகாராஷ்டிர மாநிலத்தில் விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்தே பொதுத்தேர்வை எழுதி இருக்கிறார்.

பாந்த்ராவைச் சேர்ந்த மாணவி ஒருவர் திங்கள்கிழமை ஆம்புலன்சிலேயே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பந்த்ரா பகுதியில் உள்ள அஞ்சுமன்-ஐ-இஸ்லாம் பள்ளியில் படிக்கும் மாணவி முபாஷிரா சாதிக் சையத் வெள்ளிக்கிழமை தனது அறிவியல் முதல் தாள் தேர்வை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் சாலையைக் கடக்கும்போது விபத்தில் சிக்கினார். ஹில் ரோடு செயின்ட் ஜோசப் கான்வென்ட் அருகே மதியம் 1.30 மணி அளவில் ஒரு கார் அவர்மீது மோதியது. இதில் அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அன்றைய தினமே அவருக்கு காலில் அறுவை சிகிச்சையும் செய்யவேண்டியிருந்தது.

மாணவி முபாஷிரா தனது அறுவை சிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைவதற்கு முன்பு வரை, தனது பள்ளி ஆசிரியர்களிடம் தொடர்ந்து பேசி தேர்வில் பங்கேற்க விரும்புவதாகக் கூறிவந்தார்.

குஜராத்தில் 7 விநாடியில் தடைமட்டமான பிரம்மாண்ட குளிரூட்டும் கோபுரம்!

“விபத்து அவரது தேர்வு மையமான செயின்ட் ஸ்டானிஸ்லாஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் நடந்தது. நாங்கள் பள்ளி முதல்வரைத் தொடர்புகொண்டோம். அவர்கள் உடனடியாக மாணவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்” என தேர்வு மையத்தின் பாதுகாவலர் சந்தீப் கர்மாலே கூறினார்.

அஞ்சுமன்-ஐ-இஸ்லாமின் டாக்டர் எம்ஐஜே பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் முதல்வர் சபா படேல் மருத்துவமனைக்குச் சென்று முபாஷிரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். "முபாஷிரா சிறந்த மாணவி என்பதால், மீதமுள்ள அனைத்து தேர்வுகளையும் எழுதுவாள் என்று ஆசிரியர்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர். அதன்படி தேவையான ஏற்பாட்டைச் செய்யத் தொடங்கினோம்" என்று அவர் கூறினார்.

தேர்வு வாரியச் செயலர் சுபாஷ் போராஸும் மாணவி முபாஷிரா தேர்வை ஆம்புலன்சில் வைத்தே எழுத அனுமதித்தார். அதற்கு உரிய ஏற்பாட்டுகள் செய்யப்பட்டன. "அனுமதி பெற்ற பிறகு, சில ஆசிரியர்கள் சனிக்கிழமை மாணவியின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போதும் ​அவள் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்" என்று பள்ளி முதல்வர் சபா படேல் கூறினார்.

எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த முபாஷிரா கூறுகையில், “எனது ஆசிரியர்கள் என்னை தேர்வெழுத ஊக்கப்படுத்தினார்கள். மேலும், என் பெற்றோரும் என்னுடன் உறுதுணையாக நின்றார்கள். இதற்கு எனக்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும், எனக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய புற்றுநோய் உதவி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கும் நன்றி. இனி அதே மாதிரி அடுத்த பேப்பரையும் எழுதப் போகிறேன்” என்றார்.

உடனே ஒரு லட்சம் தேவையா? தனிநபர் கடனுக்கு குறைந்த வட்டி கொடுக்கும் வங்கிகள்

click me!