தொடர்ந்து நான்காவது நாளாக போலீசாருக்கு காலிஸ்தான் அனுதாபியும், வாரிஸ் பஞ்சாப் டி தலைவருமான அம்ரித்பால் சிங் தலைமறைவாகி பூச்சாண்டி காட்டி வருகிறார்.
பஞ்சாப் மாநிலத்திற்கு திடீரென புதிய தலைவலியாக உதயமாகி இருப்பவர் அம்ரித்பால் சிங். இவர் கடந்த நான்கு நாட்களாக பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார், ஆனால், இன்னும் சிக்கவில்லை. சினிமாவே தோற்றுப் போகும் அளவிற்கு காட்சிகள் பஞ்சாப் மாநிலத்தில் அரங்கேறி வருகிறது. இவரை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக மாநிலம் முழுவதும் இன்டர்நெட் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
இன்டர்நெட் தடை விலக்கு:
பதற்றமாக இருக்கும் சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் விதிக்கப்பட்டிருந்த இன்டர்நெட் தடையை மாநில அரசு விலக்கிக் கொண்டுள்ளது. அனைத்து மொபைல் இன்டர்நெட், எஸ்எம்எஸ் சேவை (வங்கி மற்றும் மொபைல் தவிர), டாங்கில் சேவை அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், வாய்ஸ் கால் சேவை இன்னும் தடை செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் வரும் மார்ச் 23ஆம் தேதி வரை தடை அமலில் இருக்கும். அமிர்தசரஸில் உள்ள தர்ன் தரன், ஃபெரோஸ்பூர், மோகா, சங்ரூர், சப்-டிவிஷன் ஐனாலா ஆகிய இடங்களில் இன்னும் பதற்றம் நிலவுவதால், அங்கு இன்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது.
வன்முறை:
"பஞ்சாப் மாநிலத்தின் பல இடங்களில் சில பிரிவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வன்முறையைத் தூண்டி பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்றனர். பரவலாக வன்முறையில் ஈடுபடுவதாக பஞ்சாப் காவல்துறை இயக்குநர் என் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். வகுப்புவாத பதற்றம், நபர்களுக்கு இடையூறு அல்லது காயம் ஏற்படுத்துதல், மனித உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து ஏற்படுத்துதல், பொது அமைதியை சீர்குலைப்பதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் பொது பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது" என்று பஞ்சாப் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள்:
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களையும், "தவறான போலிச் செய்திகளை பரப்புவதற்கு சில பிரிவினர் பயன்படுத்தி வருகின்றனர். இதை பஞ்சாப் டிஜிபி தனது கவனத்திற்கு கொண்டு வந்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் தவறான வதந்திகளால் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதைத் தவிர்க்கவும் இன்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இந்திய தேசியக்கொடி அவமதிப்பு: கொதித்து எழுந்த சீக்கியர்கள் டெல்லியில் போராட்டம்
கத்தி, துப்பாக்கி:
இந்த மாத துவக்கத்தில் கையில் கத்தி, துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களை ஏந்தி அமிர்தசரஸ் நகர் சிறையில் இருக்கும் தனது ஆதரவாளரை விடுவிக்க வேண்டும் என்று அம்ரித்பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் சென்று இருந்தார். இது தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் போலீசாரின் பிடியில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஜலந்தர் மாவட்டத்தில் இருந்து எஸ்கேப் ஆனார் அம்ரித்பால் சிங்.
ஐஎஸ்ஐ தொடர்பா?
பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீர்குலைக்கும் வகையில் இளம் சீக்கியர்களை தனது குழுவின் கீழ் கொண்டு வருமாறு அம்ரித்பால் சிங் கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியாகி இருந்தது. அம்ரித்பால் சிங் துபாயில் உள்ள ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதத்தின் பெயரால் அப்பாவி இளம் சீக்கியர்களை ஊக்குவிக்குமாறு ஐஎஸ்ஐ அவரிடம் கேட்டதாக நம்பப்படுகிறது.
அம்ரித்பால் பிடியில் கிராமங்கள்:
துபாயிலிருந்து பஞ்சாப் திரும்பிய பின்னர், அம்ரித்பால் சிங் 'கல்சா வஹீர்' என்ற பிரச்சாரத்தை தொடங்கினார். கிராமங்களுக்குச் சென்று தனது அமைப்பை வலுப்படுத்தினார். அவர் பஞ்சாப் பிரச்சினைகளை கிளறி, மத்திய அரசுக்கு எதிராக சீக்கியர்களை தூண்டிவிட்டார். மதம் என்ற போர்வையில் அவர் விரும்பியதை மக்களை செய்ய வைப்பதில் வெற்றி பெற்றவராகவே கருதப்படுகிறார். இதன் மூலம் பஞ்சாபில் ஐஎஸ்ஐ தனது செயல்களை நிறைவேற்ற உதவியது என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாரிஸ் பஞ்சாப் டி-யின் நிறுவனரும், நடிகரும், ஆர்வலருமான தீப் சித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாலை விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து அம்ரித்பால் சிங் தலைவராக பொறுப்பேற்றார்.
அவதார் சிங் காந்தாவுடன் தொடர்பா?
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட காலிஸ்தான் பயங்கரவாதி அவதார் சிங் காந்தாவின் நெருங்கிய கூட்டாளி அம்ரித்பால் சிங் என்றும் நம்பப்படுகிறது. தடை செய்யப்பட்ட பாபர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவரான பரம்ஜித் சிங் பம்மாவின் நம்பகமான இடது கை ஆள் காந்தா. இளம் சீக்கியர்களை தீவிரவாதியாக்குவதற்கு பரம்ஜித் அடிக்கடி கொள்கை பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பர்மிங்காம் மற்றும் கிளாஸ்கோவில் இருந்து பொதுவாகக் கிடைக்கும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி வெடி பொருட்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த ஆன்லைன் வகுப்புகளை காந்தா வழங்குவதாக கூறப்படுகிறது.