மெகுல் சோக்சி மீதான இன்டர்போல் அமைப்பின் ரெட் கார்னர் நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து சிபிஐ நடவடிக்கை எடுக்க உள்ளது.
இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13000 கோடி வரை கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி இருந்த மெகுல் சோக்சி மீதான ரெட் அலார்ட்டை இன்டர்போல் விலக்கிக்கொண்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த செய்தியை அடுத்து, இனிமேல் மெகுல் சோக்சி எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்டிகுவா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கும் வழக்கில் இந்திய விசாரணை ஏஜென்சிகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மீது வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் தன்னை இந்த இரண்டு ஏஜென்சிகளும் ஆன்டிகுவாவில் இருந்து டொமினிக் ரிபப்ளிக்கிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடத்திச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்சில் இருக்கும் இன்டர்போல் தலைமையகத்தில் இருந்து மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் அலார்ட் விடப்பட்டு இருந்தது. மெகுல் சோக்சி எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிய இந்த நோட்டீஸ் உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் மெகுல் சோக்சி மீதான ரெட் அலார்ட்டை இன்டர்போல் விலக்கிக்கொண்டிருப்பது இந்தியாவுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.
இதையடுத்து இந்தியா தரப்பில் இன்டர்போலுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், வெளிவிவகாரத்துறை மூலம் தங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்ளவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
8 ஆண்டுகளில் 5931 ஐடி ரெய்டுகளில் ரூ.8,800 கோடி பறிமுதல்! மத்திய அரசு
2022ஆம் ஆண்டு மெகுல் சோக்சியை கடத்தும் சதி இந்திய அரசின் உத்தரவின் பேரில் நடந்ததாக கூறப்படும் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இந்திய அரசுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டதைவிட, பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. அதேசமயம், ரெட் கார்னர் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டாலும் இந்தியா தொடுத்திருக்கும் வழக்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உரிய நடைமுறையைப் பின்பற்றி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சோக்சி கைது செய்யப்படுவார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"ஆண்டிகுவா காவல்துறையின் அறிக்கையும், ஆண்டிகுவாவில் நடைபெற்று வரும் உயர் நீதிமன்ற விசாரணையில் சோக்சி, இந்திய அரசு திட்டமிட்டு கடத்தியது, சித்திரவதை செய்தது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். இன்டர்போல் அவரது ரெட் கார்னர் நோட்டீசை நீக்குவதற்கு முடிவு செய்திருப்பது அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது" என மெஹுல் சோக்சியின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
சோக்சி 2018ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று ஆன்டிகுவா தீவில் வசிக்கிறார். பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான அமலாக்கத்துறையின் மனு அடிப்படையில் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸை அறிவித்தது. அதன் மூலம்தான் தப்பியோடிய சோக்சி ஆன்டிகுவாவில் இருப்பது தெரியவந்தது.
'கடத்தல்' சதியைக் காரணம் காட்டி சோக்சி இன்டர்போலின் ரெட் கார்னர் நோட்டீசை எதிர்க்கிறார். "இந்தியாவிற்கு நாடு கடத்தும் நோக்கத்துடன் நான் ஆன்டிகுவாவிலிருந்து டொமினிகாவிற்கு கடத்தப்பட்டேன்" என்று அவர் இன்டர்போலிடம் கூறினார். இந்தியாவுக்குத் திரும்பினால் தான் சிகிச்சையைப் பெற முடியாது என்றும் நியாயமான விசாரணை நடத்தப்படாது என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
நிரவ் மோடி கம்பெனியின் பேலன்ஸ் ரூ.236 தான் இருக்காம்! பாக்கியை வசூலிப்பது எப்படி?
ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சேர்ந்த சட்ட அமலாக்க அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ள இன்டர்போல் அமைப்பால் வழங்கப்படும் உச்சபட்ச எச்சரிக்கை அறிக்கை ஆகும். இது நாடுகடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கை நிலுவையில் உள்ள நபரை கண்டறிந்து, கைது செய்ய உதவக்கூடியது.
மெகுல் சோக்சி, 2018ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் இருந்து தப்பி ஓடி கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு, இன்டர்போல் அவருக்கு எதிராக ரென் கார்டனர் நோட்டீஸ் வெளியிட்டது. பின்னர் ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் தஞ்சம் புகுந்த அவர் அங்கேயே குடியுரிமை பெற்றுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மெகுல் சோக்சி மற்றும் அவரது மருமகன் நிரவ் மோடி ஆகிய இருவர் மீதும் தனித்தனியாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.