அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் தயாராகி வருகிறது. ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொறுப்பேற்றுள்ளது. கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலகம் முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனிடையே அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில், கோயில் அறக்கட்டளைக்கு 5,000 கோடிக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர். நன்கொடையாக பெறப்பட்ட நிதி அறக்கட்டளையின் நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. கூடுதலாக, ஆன்லைன் பரிவர்த்தனைகள், காசோலைகள் மற்றும் ரொக்கம் போன்ற பல வழிகளில் தினசரி நன்கொடை ரூ.2 லட்சம் வரை பெறப்படுகிறது. அதன்படி மாதாந்திர நன்கொடைகள் சுமார் 1 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா! எப்படி போவது..? எங்கு தங்கலாம்..?? முழு விவரம் இதோ!
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, புகழ்பெற்ற ஆன்மீக குரு மொராரி பாபு அயோத்தி ராமர் கோவிலுக்கு அதிகபட்சமாக ரூ.11.3 கோடி நன்கொடை அளித்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொராரி பாபுவின் ஆதரவாளர்களும் கூட்டாக ரூ.8 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
ராம கதை’க்காக அறியப்பட்ட மொராரி பாபு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார். இவர் உலகம் முழுவதும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கதைகளைப் பகிர்ந்து வருகிறார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான குஜராத்தின் வைர வியாபாரி கோவிந்த்பாய் தோலாக்கியா, கோயிலின் கட்டுமானத்திற்காக 11 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் பிரம்மாண்ட திறப்பு விழா.. முதல் தங்கக்கதவு நிறுவப்பட்டது..
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி திரட்டும் முயற்சியை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜனவரி 14, 2021 அன்று தொடங்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராமர் கோவிலுக்கு முதல் நன்கொடையாளர் ஆனார், காசோலை மூலம் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு ரூ. 5 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.