குஜராத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடைபெற்று வரும், Vibrant Gujarat Global Summit 2024 உச்சி மாநாட்டில் பேசிய அதானி குழும தலைவரும், தொழிலதிபருமான கவுதம் அதானி, குஜராத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 1,00,000 நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்தார். மேலும், இதுவரை குஜராத் மாநிலத்தில் அதானி குழுமம் செய்துள்ள முதலீடுகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
“முந்தைய உச்சிமாநாட்டில், 2025ஆம் ஆண்டுக்குள் ரூ.55,000 கோடிக்கு மேல் முதலீடு செய்வதாக அறிவித்தேன். பல்வேறு துறைகளில் நாங்கள் ஏற்கனவே ரூ.50,000 கோடியைத் தாண்டிவிட்டோம். மேலும் 25,000 நேரடி மற்றும் மறைமுக வேலைகள் என்ற எங்களின் மிகப்பெரிய இலக்கையும் தாண்டி விட்டோம்.” என்று கவுதம் அதானி தெரிவித்தார்.
மேலும், சுயசார்பு இந்தியா திட்டத்தை மேம்படுத்துவதற்காக சோலார் பேனல்கள், பச்சை அம்மோனியா, ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர்கள் மற்றும் காற்றாலை உள்ளிட்ட பசுமை விநியோகச் சங்கிலிகளை அதானி குழுமம் விரிவுபடுத்துகிறது என்றும் அவர் கூறினார். சுயசார்பு இந்தியா பசுமை விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்தி, மிகப்பெரிய ஒருங்கிணைந்த, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சூழலை உருவாக்குகிறோம் எனவும் அவர் விளக்கினார்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கவ்டாவில் உலகின் மிகப்பெரிய பசுமை எரிசக்தி ஆலையை அதானி குழுமம் நிர்மாணித்து வருவதாகவும் கவுதம் அதானி கூறினார். 725 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, 30 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை பாராட்டிய கவுதம் அதானி, 2014ல் இருந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 185 சதவீதமும், தனிநபர் வருமானம் 165 சதவீதமும் வளர்ந்துள்ளதாக தெரிவித்தார். புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் கொரோனா தொற்று நோய்களின் காலகட்டத்தில் இந்த சாதனைகள் இணையில்லாதது என்று அவர் புகழாரம் சூட்டினார். ஜி20 இந்திய தலைமையின் கிழ், ஜி20 நாடுகளின் குழுவில் உலகளாவிய தெற்கை சேர்ந்ததற்கும் பிரதமர் மோடியை அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பாராட்டினார்.
வைப்ரண்ட் குஜராத் உலக உச்சிமாநாடு 2024 : ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது அல் நஹ்யான் உரை..
துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 20 ஆண்டுகளுக்கு முன்பு, 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதியன்று அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. காலப்போக்கில், இந்த மாநாடு உலகளாவிய நிகழ்வாக உருமாறி, குஜராத்தை விருப்பமான முதலீட்டு இடமாக மாற்றுவது என்பதில் இருந்து இந்தியாவின் மிக முதன்மையான வணிக உச்சிமாநாடுகளில் ஒன்று என்ற அந்தஸ்தை பெற்றது.
இந்த நிலையில், 10ஆவது துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 2024 குஜராத் மாநிலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் உலகின் முன்னணி நிறுவனங்கள், இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் துடிப்பான Vibrant Gujarat Global Summit மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.