
ராணுவத்தில் உயர் அதிகாரிகளுக்கு பணி விடை செய்யும் ‘ஆர்டர்லி’ முறையை எதிர்த்து குரல் எழுப்பி, மர்மமாக இறந்த கேரள ராணுவ வீரர் ராய் மாத்யூவின் உடல் மீண்டும் உடற் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ராய் மாத்யூ சாவில் மர்மம் இருப்பதாக அவரின் மனைவியும், உறவினர்களும் சந்தேகம் எழுப்பியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரகசிய வீடியோ
கேரளாவின் கொல்லம் மாவட்டம், எழுகோன் வட்டம், கருவேலி நகரைச் சேர்ந்தவர் ராய்மாத்யூ(வயது33). இவர் நாசிக்கில் உள்ள தியோலாலி ராணுவ கண்டோன்மன்டில் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ராணுவத்தில் உயர் அதிகாரிகள் கீழ்நிலை ஊழியர்களை எவ்வாறு நடத்துகிறார்கள்? என்பதை ரகசியமாக வீடியோ எடுத்து அதை தனியார் செய்தி இணையதளத்துக்கு ராய் மாத்யூ அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சேனல்களில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தி ராய் மாத்யூ செய்தார் என கண்டுபிடித்தது.
மர்மசாவு
இந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை ராய் மாத்யூ தான் பணியாற்றும் கண்டோன்மன்ட் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாகக் மீட்கப்பட்டார். ராணுவம் தரப்பில் “ ராய் மாத்யூ தற்கொலை செய்து கொண்டார்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
புகார்
ஆனால், ராய்மாத்யூ மனைவி பினி, உறவினர்கள் ராய்மாத்யூ கடந்த மாத்யூ சாவில் மர்மம் இருப்பதாக போலீசிலும், கொல்லம் மாவட்ட கலெக்டரிடம் பினி புகார் செய்தார்.
மறுப்பு
இந்த சூழலில், நாசிக்கில் இருந்து விமானம் மூலம் நேற்று கொல்லத்துக்கு ராணுவ வீரர் ராய்மாத்யூவின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த உடலைப் பெற ராய் மாத்யூ மனைவி பினி, உறவினர்கள் மறுத்தனர்.
கோரிக்கை
ராய் மாத்யூ உடலில் தாக்கப்பட்டதற்கான காயங்களும், கால் பாதத்தில் தாக்கப்பட்டு ரத்தம் உறைந்து இருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மீண்டும் புதிதாக உடற்கூறு பரிசோதனை நடத்தவும் பினியும், உறவினர்களும் கோரிக்கை விடுத்தனர்.
மீண்டும் ஆய்வு
இது குறித்து கொல்லம் நகர போலீஸ் சூப்பிரெண்டு எஸ். சுரேந்திரன் கூறுகையில், “ ராய் மாத்யூ உடலில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாக அவரின் மனைவி கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். போலீசாரும் சாவில் மர்மம் இருப்பதாக கருதுகிறோம். இதையடுத்து, ராய்மாத்யூ உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொல்லம் மருத்துவக் கல்லூரிக்கு மாத்யூ உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது'' என்றார்.
மரியாதைக் குறைவு
ராய் மாத்யு மனைவி பினி கூறுகையில், “ என் கணவர் சாவில் மர்மம் இருக்கிறது. எனக்கு நீதி வேண்டும். என்ன நடந்தது என தெரிய வேண்டும். விமானத்தில் எனது கணவர் உடலை இறக்கும்போது மிகவும் மரியாதை குறைவாக நடத்தினர். அவரின் உடல் அரை மணிநேரம் வரை யாரும் தொடாமல் விமான தளத்தில் இருந்தது '' எனத் தெரிவித்தார்.