
பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயம் அளிக்க வேண்டும் என்றும், சமையல் பணியாளர்கள், உதவியாளர்கள் அவசியம் சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடுமுழுவதும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் லட்சக்கணக்காண மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த மதிய உணவு திட்டத்தில் மோசடிகள், மாணவர்களின் பெயரில் மானியங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுதல், அதிகமான மாணவர்களை கணக்கில் காட்டி குறைந்த மாணவர்களுக்கு உணவு அளித்தல், உணவுப் பொருட்களை திருடுதல் போன்றவற்றைத் தடுக்க மத்திய மனித வள அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் இணைந்திருக்கும் மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று மனித வள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், மதிய உணவுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டு, திட்டம் சிறப்பாக கையாளப்படும் என அமைச்சகம் நம்புகிறது. ஆதார் எண் இல்லாத மாணவர்கள் விரைவில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம் செய்து, ஜூன் 30-ந் தேதிக்குள் இணைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றும் சமையல் பணியாளர்கள், உதவியாளர்களும் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மத்திய அரசின் மூலம் கிடைக்கும் சேவைகள், மானியங்கள், பலன்கள் எளிதாக பயனாளிகளுக்கு நேரடியாக சென்று சேர ஆதார் எண் பயன்படுகிறது. அதனால், தான், மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் ஆதார் எண் இருந்தால், அவர்களுக்கு உரிய மானியம் நேரடியாக சேரும். இது தொடர்பாக அறிவிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.