பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கிய விருந்தில் பாடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடலை இரு தலைவர்களும் ரசித்து கேட்டனர்
பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்று பிரதமர் மோடி நாடு திரும்பியுள்ளார். முன்னதாக, பிரான்ஸ் அதிபர் அழைப்பை ஏற்று, ஜூலை 13-14 தேதிகளில் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, பிரான்ஸின் தேசிய தினமாக கொண்டாடப்படும் பாஸ்டில் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு இம்மானுவேல் மேக்ரான் அரசு சார்பிலான விருந்து மற்றும் தனிப்பட்ட இரவு விருந்தையும் அளித்தார். உலகப் புகழ்பெற்ற பிரான்ஸின் லோவுர் அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடிக்கு இம்மானுவேல் மேக்ரான் அரச விருந்து அளித்தார். சுமார் 200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட அந்த விருந்தில், ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடல் இரண்டு முறை பாடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த விருந்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஜெய் ஹோ' பாடல் இரண்டு முறை பாடப்பட்டது. pic.twitter.com/EMKG5ngLZ9
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
அந்த பாடலை இரு தலைவர்களும் ரசித்து கேட்டனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மேசையை தட்டி மிகுந்த உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக ஜெய் ஹோ பாடலை கேட்டு ரசித்தார்.
உலகப் புகழ்பெற்ற பிரான்ஸின் லோவுர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விருந்தில், அந்நாட்டு அமைச்சர்கள், பெரிய தொழிலதிபர்கள் மற்றும் பல உயர்மட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். லோவுர் அருங்காட்சியகத்தில் வழக்கமான பிரெஞ்சு உணவு வகைகளே இடம்பெற்றிருக்கும். ஆனால், பிரதமர் மோடியின் வருகையையொட்டி, இந்திய உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. பிரதமர் மோடி சைவ உணவுகளை சாப்பிடுவதை மனதில் வைத்து மெனு பிரத்தியேகமாக சைவ உணவு வகைகளும் மெனுவில் இடம்பெற்றிருந்தன.
சந்திரயான்-3 விண்கலம் எங்கு உள்ளது? விண்ணில் நடந்த அதிசய காட்சிகள் வெளியீடு!
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009ஆம் ஆண்டு, அவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற ஹிந்தி படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை அவர் பெற்றார். படத்தின் ‘சவுண்ட் ட்ராக்’ மற்றும் “ஜெய் ஹோ” பாடல் ஆகியவற்றிற்காக அவருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் கூறிய வார்த்தைகளுக்காக தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சியது என்பது குறிப்பிடத்தக்கது.