உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேரை பணியிட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்
உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவுரங் காந்த், மனோஜ் பஜாஜ் மற்றும் தினேஷ் குமார் சிங் ஆகிய மூன்று நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, நீதிபதி கவுரங் காந்த் டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். நீதிபதி மனோஜ் பஜாஜ் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திலிருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி தினேஷ் குமார் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து கேரள உயர் நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஜூலை 12ஆம் தேதியன்று கொலீஜியம் பரிந்துரைப்படி, இந்த மூன்று நீதிபதிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் விரும்பும் அல்லது தங்களது மாநில உயர் நீதிமன்றங்களில் தொடர வேண்டும் என்ற அந்த நீதிபதிகளின் தனிப்பட்ட கோரிக்கைகளுக்கு மாற்றாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் எங்கு உள்ளது? விண்ணில் நடந்த அதிசய காட்சிகள் வெளியீடு!
கொலீஜியம் தனது பரிந்துரையில் “சிறந்த நீதி நிர்வாகத்திற்காக” நீதிபதி கவுரங் காந்தின் இடமாற்றம் பரிந்துரைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், மத்தியப் பிரதேசம் அல்லது ராஜஸ்தானுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு கொலீஜியத்திடம் நீதிபதி கவுரங் காந்த் கோரியிருந்தார்.
இந்தப் பின்னணியில், பணியிட மாற்றம் தொடர்பான கொலீஜியம் பரிந்துரையை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமும் கூட வலியுறுத்தியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருகிற திங்கள்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.