
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து நடந்த சில நாட்களுக்குப் பிறகு, கர்நாடகாவில் ரயில் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் கற்களை வைக்கும் வீடியோ இப்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அருண் புதூர் என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட வீடியோவில், ரயில் தண்டவாளத்தில் பல பெரிய கற்களை வைத்ததற்காக ஒரு சிறுவனை, 2 நபர்கள் விசாரிப்பதை பார்க்க முடிகிறது. இது போன்ற ஒரு செயலைச் செய்வது இதுவே முதல் முறை என்று அச்சிறுவன் வேண்டுகோள் விடுத்தான். பின்னர் கற்களை அகற்றுமாறு அச்சிறுவனிடம் கூறி அவனை விடுவித்துள்ளனர்.
அவர் தனது பதிவில் “ மற்றொரு #ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த முறை #கர்நாடகாவில் ரயில் பாதையை நாசப்படுத்தியதாக சிறுவன் ஒருவன் பிடிபட்டான். பல்லாயிரக்கணக்கான கிமீ ரயில் தண்டவாளங்கள் உள்ளன, பெரியவர்களை மறந்துவிட்டோம், இப்போது குழந்தைகளும் நாசவேலையில் ஈடுபட்டு உயிரிழக்கிறார்கள். இது இது ஒரு தீவிரமான பிரச்சினை. தயவுசெய்து இதைப் பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஒடிசாவின் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்து நடந்து, மூன்று நாட்களுக்குப் பிறகு, ட்விட்டரில் இந்த வீடியோ இன்று வெளியானது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானகா பஜார் நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர், 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், பாலசோரில் நடந்த மூன்று ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ, ரயில்வே, ஒடிசா அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து, இறந்தவர்களின் புகைப்படங்கள் மற்றும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் பட்டியல்களுடன் மூன்று ஆன்லைன் இணைப்புகளைத் தயாரித்துள்ளது.
ஒடிசாவின் பஹானாகாவில் நடந்த மூன்று ரயில் விபத்தில் தங்கள் உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் தெரியாதவர்களின் குடும்பங்களுக்கு வசதி செய்வதற்காக, ஒடிசா அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்திய ரயில்வே அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியை எடுத்துள்ளது. ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் “ குடும்ப உறுப்பினர்கள்/உறவினர்கள்/ இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள், இறந்தவர்களின் புகைப்படங்கள், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் பட்டியல் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் பற்றிய இணைப்பைப் பயன்படுத்தி பின்வரும் விவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும், ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த ரயில் சோகத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை இணைக்க ரயில்வே உதவி எண் 139-ல் 24 மணி நேரமும் பணியாளர்கள் வேலை செய்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த அதிகாரிகள் 139 உதவி எண்ணில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.