நாட்டையே உலுக்கிய மோசமான ரயில் விபத்து : எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த ரயில்வே போலீஸ்

By Ramya sFirst Published Jun 5, 2023, 10:22 PM IST
Highlights

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக பாலசோர் அரசு ரயில்வே காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது

கடந்த 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த கோர ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் விபத்தில் சிக்கியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், அருகில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பின்புற பெட்டிகள் மூன்றாவது பாதையில் கவிழ்ந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

அதே நேரத்தில் அந்த வழியாகச் சென்ற பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸின் கடைசி சில பெட்டிகள் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்தன. நாட்டின் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விபத்தில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒடிசாவின் பாலசோரில் குறைந்தது 275 பேரை கொன்ற பயங்கரமான ரயில் விபத்து பற்றிய விசாரணை முடிந்துவிட்டதாக தெரிவித்தார். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை அளித்தவுடன் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றார். மேலும் பேசிய அவர், "பயங்கரமான சம்பவத்தின் மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான் தற்போது விவரங்களை சொல்ல விரும்பவில்லை. அறிக்கை வெளியே வரட்டும். மூல காரணமும் காரணமானவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மட்டும் நான் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் பாலசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக பாலசோர் அரசு ரயில்வே காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் "அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள்" "மனிதர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து" போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கும். ரயில்வே சட்டத்தின் 153, 154 மற்றும் 175 பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலசோர் ஜிஆர்பிஎஸ் எஸ்ஐ பப்பு குமார் நாயக் அளித்த புகாரின் பேரில் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 337, 338, 304A (ஜாமீனில் வெளிவர முடியாதது) & 34 ஆகிய பிரிவுகளும் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனிடையே ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கோரியது. எனினும் ரயில் விபத்துக்கு காரணமாக கூறப்பட்ட ஓட்டுனர் பிழை மற்றும் சிஸ்டம் செயலிழப்பு ஆகியவற்றை ரயில்வே நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!