காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி… பயணிகள் வசதிக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!!

By Narendran SFirst Published Nov 16, 2022, 6:53 PM IST
Highlights

காசியில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக நவம்பர் 16, 23, 30 டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படட உள்ளது.  

காசியில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக நவம்பர் 16, 23, 30 டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படட உள்ளது. காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான அறிவுப் பிணைப்பு மற்றும் பண்டைய நாகரிக தொடர்பை மீண்டும் கண்டறியும் வகையில் வாரணாசியில் நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒரு மாத கால 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பழங்கால நூல்கள், இலக்கியம், கைத்தறி, கைவினை, தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன. இதுமட்டுமின்றி கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் போன்றவையும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தின் பாரம்பரியமன கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைத்தறி கைவினை பொருட்கள் ஆகியவை அடங்கிய பொருட்காட்சியும் இதில் இடம்பெறுகிறது. அதுமட்டுமின்றி பரதநாட்டியம், கர்நாடக இசை தமிழ் இசை, தமிழ் நாட்டுப்புற இசை, நாதஸ்வர கச்சேரி, தேவாரம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன.

இதையும் படிங்க: ஜி20 மாநாட்டில் முக்கியத்துவம் பெற்ற சதுப்பு நிலக்காடு எவ்வாறு இயற்கை அழிவுகளை பாதுகாக்கிறது?

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலை, யோகா, ஆயுர்வேதம் சார்ந்த கலாச்சார வல்லுநர்கள், தொழில் முனைவோர், தங்கும் விடுதி உரிமையாளர்கள், கைவினைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர். அவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து நவம்பர் 16, 23, 30 டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயிலில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. மறு மார்க்கத்தில் நவம்பர் 27 டிசம்பர் 4, 11 மற்றும் 18 ஆகிய நாட்களில் பனாரஸ் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இதே போல சென்னை, கோயம்புத்தூர் கலைஞர்களின் வசதிக்காக எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயில், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கயா விரைவு ரயில், பாடலிபுத்திரம் - பெங்களூர் விரைவு ரயில் ஆகியவற்றில் முறையே 3 குளிர்சாதன மூன்றெழுத்து படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு… பணம் எடுக்க வந்த இளைஞர்கள் அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ!!

ஒரு மாத காலம் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக இந்திய இரயில்வே தமிழ்நாட்டிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் காசிக்கு மொத்தம் 13 ரயில்களை இயக்குகிறது. காசி தமிழ் சங்கமத்திற்கான 216 பிரதிநிதிகளை ஏற்றிச் செல்லும் முதல் ரேக் இன்று தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறது. தமிழகத்தில் இருந்து புறப்படும் முதல் ரயிலில் ராமேஸ்வரத்திலிருந்து 35 பேரும், திருச்சியில் இருந்து 103 பேரும், சென்னை எழும்பூரில் இருந்து 78 பேரும் செல்கின்றனர். சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பும் ரயிலை நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்துக்கொள்கிறார். 

click me!