"இனி ஆதார் எண்ணை காட்டி பணம் செலுத்தலாம்" - கிரெடிட் டெபிட் கார்டுகள் தேவையில்லை

First Published Dec 24, 2016, 5:16 PM IST
Highlights


கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள் இல்லாமல் கடைகளில் வாங்கிய பொருட்கள், சேவைகளுக்கு பணம் செலுத்தும் வகையில், ஆதார் எண் அடிப்படையிலான ஆப்ஸை(செயலி) மத்தியஅரசு இன்று அறிமுகம் செய்கிறது.

இந்த ஆதார் பேமென்ட் ஆப்ஸ் மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் இருந்து கடைக்காரருக்கு பணம் செலுத்த முடியும். தனியார் நிறுவனங்களாக மாஸ்டர் கார்டு, விசா, பே-டிஎம் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் சேவைக்கட்டணங்களை தவிர்க்கவே அரசு இந்தஆப்ஸை இன்று அறிமுகம் செய்கிறது.

டிஜிட்டல் பரிமாற்றம்

பிரதமர் மோடி, கடந்த மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். அதன்பின், மக்களிடையே டிஜிட்டல் பேமென்ட், பரிமாற்றத்தை ஊக்குவிக்க மக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.

ஆதார் ஆப்ஸ்

இதில் டிஜிட்டல் பரிமாற்றத்தின் போது, தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் கமிஷனை தவிர்க்க  ஆதார் எண் அடிப்படையிலான செயலியை உருவாக்க அரசு முடிவு செய்தது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக ஆதார் பேமென்ட் ஆப்ஸ் இன்று மக்களுக்கு அறிமுகமாகிறது.

இந்த ஆதார் ஆப்ஸை ஐ.டி.எப்.சி. வங்கி, ஆதார் எண் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. நிறுவனம், தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.

செல்போன் தேவையில்லை

இது குறித்து இந்திய  பிரத்யேக அடையாள எண் ஆணையம்(யு.ஐ.டி.ஏ.ஐ.) தலைமை நிர்வாக அதிகாரி அஜெய் பூஷன் பாண்டே கூறுகையில், “ மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ள ஆதார் பேமெண்ட் ஆப்ஸ் மூலம், வாடிக்கையாளர்கள் செல்போன் இல்லாமல் கடைக்காரருக்கு பணம் செலுத்தலாம். 40 கோடி மக்கள் ஆதார் எண்ணை, வங்கிக்கணக்குடன் இணைத்துள்ளனர். 2017 மார்ச் மாதத்துக்குள் அனைத்து மக்களின் ஆதார் எண்ணும் வங்கிக்கணக்குடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால் பணம் செலுத்துவது எளிதாகும்'' எனத் தெரிவித்தார்.

இரு அம்சம்

ஆதார் பேமெண்ட் ஆப்ஸில் இரு முக்கிய அம்சங்கள் உள்ளன. . முதலாவதாக நுகர்வோர்களுக்கான ஆதார் பேமெண்ட் ஆப்ஸ், இரண்டாவது, வர்த்தகர்கள், வியாபாரிகள் பயன்படுத்தும் ஆப்ஸ் ஆகும்.

நுகர்வோர்களுக்கான ஆப்ஸ் என்பது இ-வாலட் போன்றது. 2-வதாக வர்த்தகர்களுக்கான ஆப்ஸ். இந்த ஆப்ஸை இயக்க வர்த்தகர் ஒருவருக்கு ஸ்மார்ட்போன், கைரேகை பதிவு செய்யும் எந்திரம் அவசியமாகும். இந்த எந்திரம் மூலமே விரல்ரேகை செய்து பணப்பரிமாற்றத்தை செய்ய முடியும். இந்த எந்திரத்தை வர்த்தகர்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தி பெற்று கொள்ளலாம். இந்த செயலியையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

எப்படி ஆப்ஸ் செயல்படுகிறது...

வர்த்தகர்களுக்கான ஆதார் பேமெண்ட் ஆப்ஸ் செயல்பட இரு பொருட்கள் அவசியம். ஒன்று, ஸ்மார்ட்போன், 2-வது ரேகை பதிவு செய்யும்மெஷின். ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் எண்ணையும், கணக்கு வைத்து இருக்கும் வங்கியின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் அந்த எந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர் தனது விரல் ரேகையை வைத்தவுடன் அனைத்து விவரங்களும் வரும். அதை ஓ.கே. செய்தால், பணம் பரிமாற்றத்துக்கான பாஸ்வேர்டு வரும். அதை அந்த எந்திரத்தில் பதிவு செய்தால் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்து வர்த்தகரின் வங்கிக்கணக்குக்கு பணப் பரிமாற்றம் ஆகும்.

 

click me!