
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் லிவ்-இன் உறவுகள் (Live-in relationships) குறித்து பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார். பெண்கள் லிவ்-இன் உறவுகளிலிருந்து விலகி இருக்காவிட்டால் 50 துண்டுகளாகத்தான் காண வேண்டியிருக்கும் என்று அவர் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநர் ஆனந்திபென் புதன்கிழமை வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 47வது பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் இந்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த ஆளுநர், மாணவிகள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பெண்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாகச் சிந்திக்க வேண்டும் என்றும் சுரண்டலுக்கு வழிவகுக்கும் லிவ்-இன் உறவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"நம் மகள்களுக்கு நான் ஒரே ஒரு செய்திதான் கூற விரும்புகிறேன். லிவ்-இன் உறவுகள் இப்போது வழக்கத்தில் இருக்கலாம். அதை நீங்கள் அது தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்களே முடிவெடுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்று நீங்களே பார்த்திருக்கிறீர்கள் - கடைசியில் அவர்களை 50 துண்டுகளாகத்தான் காண வேண்டியிருக்கிறது. கடந்த 10 நாட்களாக, இதுபோன்ற செய்திகள் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன, அவற்றைப் பார்க்கும்போதெல்லாம், அவர்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்," என்று ஆளுநர் ஆனந்திபென் தெரிவித்தார்.
போக்சோ சட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசிய படேல், பாதிக்கப்பட்ட பெண்களைத் தான் தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும், அவர்களில் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் துயரமான கதை இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒரு நீதிபதியுடனான சந்திப்பின்போது, அனைத்து பல்கலைக்கழகங்களும் மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் லிவ்-இன் உறவுகளுக்குப் பலியாவதைத் தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாவும் ஆளுநர் கூறினார்.
முன்னதாக, செவ்வாயன்று ஜனநாயக் சந்திரசேகர் பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்த ஆளுநர் ஆனந்திபென் படேல், “லிவ்-இன் உறவுகளின் விளைவுகளைப் பார்க்க வேண்டுமானால், ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்று பாருங்கள், அங்கு 15 வயதுடைய இளம் பெண்கள்கூட கைகளில் குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறார்கள்” என்று அவர் பேசினார்.